ஐயப்பனை தரிசித்ததாக பெண்கள் லிஸ்ட் பொய் சொன்னதா கேரள அரசு?

சபரிமலை ஐயப்பனை தரிசித்ததாக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு கொடுத்த பட்டியலில் ஏக குளறுபடி என தகவல் வெளியாகி உள்ளது.

பெண்களின் வயதை குறைத்து காண்பித்துள்ளதும் அம்பலமாகி கேரள அரசு பொய் சொல்கிறது என காங்கிரஸ், பா.ஜ.க தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பனை தரிசிக்கலாம் என்ற தீர்ப்புக்குப் பின் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட 51 பெண்கள் தரிசனம் செய்ததாக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசுத் தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது.

கேரள அரசு தாக்கல் செய்த பட்டியலில் ஏக குளறுபடிகள் உள்ளது அம்பலமாகியுள்ளது. ஆந்திரா மாநிலம் குண்டூரைச் சேர்ந்த பத்மாவதி தாசரி என்ற பெண்ணின் உண்மையான வயது 55. ஆனால் கேரள அரசின் பட்டியலில் 48 வயது என உள்ளது. அதே போல் தமிழகத்தின் தருமபுரியைச் சேர்ந்த கலாவதி என்ற 52 வயது பெண்ணின் வயது 43 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பலரின் வயதை கேரள அரசு குறைத்துக் காண்பித்தது வெட்கக்கேடான செயல் என கேரள காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா கண்டனம் தெரிவித்துள்ளார்.

கேரள பா.ஜ.க. தலைவர் ஸ்ரீதரன் பிள்ளையும் கேரள அரசு பொய் சொல்வதாக குற்றம் சாட்டியுள்ளார். ஐயப்பனை தரிசித்த 51 பெண்களின் பட்டியலில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் பெயரும் இல்லை. அப்படியெனில் ஜனவரி 2-ந் தேதி பிந்து, கனகதுர்கா ஆகியோர் ஐயப்பனை தரிசித்ததாக கூறுவதும் பொய்யா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதற்கு பதிலளித்த கேரள தேவசம் போர்டு கடகம் பள்ளி சுரேந்திரன், ஆன்லைனில் பதிவு செய்து தரிசித்த பெண்களின் பட்டியல் தான் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கனகதுர்கா, பிந்து தனியாக சென்று தரிசனம் செய்தவர்கள் என்று மழுப்பலாக தெரிவித்துள்ளதும் சர்ச்சையாகி உள்ளது.

More News >>