சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்ட திமுக தொண்டர் பாடலூர் விஜய் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!
சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்ட திமுக தொண்டர் பாடலூர் விஜய் மறைவுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது: சமூக வலைதளத்திலும், முகநூலிலும் திமுகவின் கொள்கை பரப்பும் செயல்வீரராக திகழ்ந்த பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் விஜய் மறைவுச்செய்தி கேட்டு சொல்லொனாத் துயரத்திற்கும், பேரதிர்ச்சிக்கும் உள்ளானேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாற்றுத்திறனாளியான பாடலூர் விஜய் எனது பொதுக்கூட்ட பேச்சுக்களை எல்லாம் தானே டைப் செய்து தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு, கழகத்தின் உண்மை தொண்டராக விளங்கிய அவர் திடீரென்று மறைந்தது என்னை கண் கலங்க வைத்திருக்கிறது. அவரின் இயக்கப் பணியினைக் கண்டு வியந்த நான் பெரம்பலூர் சென்ற நேரத்தில் நேரடியாக அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்து அவரைப் பாராட்டி இருக்கிறேன்.
அப்போது அவரிடம் இருந்த இயக்க உணர்வினையும், கருணாநிதி மீதும் என் மீதும் அவர் வைத்திருந்த பற்றையும் பாசத்தையும் பார்த்து நெகிழ்ந்து போயிருக்கிறேன். திமுக மீது மாசு கற்பிக்க முயல்வோர் மீதும் அபாண்டமாக பழி சுமத்துவோர் மீதும் துள்ளிக் குதிக்கும் காளை போல் தனது முகநூலில் பதிலடி கொடுத்த ஒரு உற்சாகமிக்க, உணர்வுமிக்க தொண்டரை இழந்த சோகத்தில் மூழ்கி தவித்துக் கொண்டிருக்கிறேன்.
பாடலூர் விஜய்யை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவருடன் முகநூலில் உள்ள திமுக தொண்டர்களுக்கும், பெரம்பலூர் மாவட்ட திமுக தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.