ட்வீட்களை பகிரங்கப்படுத்திய பக்
ட்வீட்டர் செயல்பாட்டில் ஏற்பட்ட குறைபாட்டினால், குறிப்பிட்டோரிடம் மட்டும் பகிர்ந்து கொள்ளப்பட்ட பதிவுகள் பகிரங்கமாக பொதுவெளிக்கு வந்துள்ளன. இக்குறைபாட்டை சரி செய்து விட்டதாக ட்வீட்டர் அறிவித்துள்ளது.
ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான ட்வீட்டரில் மட்டும் பாதுகாக்கப்பட்ட பதிவுகள் (Protect your Tweets) என்ற கட்டளையை நிறைவேற்றுவதை பக் என்னும் குறைபாடு தடைசெய்துள்ளது. அதன்படி, 2014 நவம்பர் 3 முதல் 2019 ஜனவரி 14 வரை தங்கள் ட்வீட்டர் கணக்கின் அமைப்பில் மாற்றங்கள் செய்த அனைத்து பயனர்களின் கணக்கும் பாதிப்படைந்துள்ளன. பாதுகாக்கப்பட்டவை என்று அவர்கள் வகைப்படுத்தியிருந்த அனைத்துப் பதிவுகளும் பொதுவெளிக்கு வந்துள்ளன.
ட்வீட்டர் கணக்குத் தொடங்கும்போது அது 'பொது' என்ற வகையில் அனைவரும் பார்க்கத்தக்கதாகவே இருக்கும். குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களுடன் மட்டும் தொடர்பு கொள்ள வேண்டுமனால், பதிவுகளை அவ்வகைக்குள் (Protect your Tweets) சேர்க்க வேண்டும். முகநூலில் தனிப்பட்டதென வகைப்படுத்தப்படும் கணக்கினைப் போன்றே பாதுகாக்கப்பட்ட ட்வீட்டர் கணக்கும் இயங்கும். இப்படி பாதுகாக்கப்பட்ட வகையில் இயங்குவது பயனருக்கு தனிப்பட்ட தகவல்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவும்.
'தனிப்பட்டது மற்றும் பாதுகாப்பு' (Privacy and safety) என்ற வகைப்பாட்டின் கீழ் 'உங்கள் பதிவுகளை பாதுகாக்க' (Protect your Tweets) உள்ள பிரிவை தேர்ந்தெடுத்தால் ட்வீட்டர் பதிவுகளை பொதுவெளியில் உள்ளவர்கள் பார்க்க இயலாது.
ஐஓஎஸ் மற்றும் இணையத்தில் ட்வீட்டரை பயன்படுத்துகிறவர்களுக்கு இப்பாதிப்பு நிகழவில்லை. ஆண்ட்ராய்டில் எத்தனை பேர் இப்படி பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள் என்ற எண்ணிக்கை தெரியவில்லை. ட்வீட்டரின் இதற்கு முன்பு கடந்த செப்டம்பர் மாதம் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகத்தில் ஏற்பட்ட தாக்குதல் காரணமாக 30 லட்சம் பயனர்களின் நேரடி தொடர்பு பதிவுகளை மூன்றாம் நபர் செயலி நிறுவனங்கள் பார்க்கக்கூடிய நிலை உருவானது.
தனிப்பட்ட பதிவுகளை பொதுவெளியில் உள்ளவர்கள் பார்க்கக்கூடியதான இக்குறைபாட்டை ஜனவரி 14ம் தேதி சரி செய்து விட்டதாக ட்வீட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.