சொத்துக்காக தொழிலதிபர் கொலை: கள்ளக்காதலர்களுடன் சேர்ந்து மனைவி, மகள் வெறிச்செயல்
மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்ட தொழிலதிபர் மரணத்தின் பின்னணியில் அவரது மனைவி மற்றும் மகள் இருப்பது போலீஸ் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஐஎன்டியூசி நகரைச் சேர்ந்தவர் ஜெகநாதராஜா (58). இவருக்கு மனைவி சொக்கத்தாய் (55) மற்றும் மகள் பிரியா (31) உள்ளனர்.
ஜெகநாதராஜா கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் வீட்டின் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டதாக கூறப்பட்டது. ஆனால், ஜெகநாதராஜாவின் மரணத்தில் சங்தேகம் இருப்பதாக அவரது தம்பி ராதாகிருஷ்ணராஜா மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த எஸ்.பி.ராஜரானுக்கு உத்தரவிட்டார்.
இந்த வழக்கு விசாரணையில் ஈடுபட்ட போலீசாருக்கு பல்வேறு திடுக் தகவல்கள் தெரியவந்தது. தொழிலதிபரை மனைவியும், மகளும் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்தது விசாரணையின் மூலம் உறுதியானது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், மனைவி மற்றும் மகளுக்கு கள்ளத்தொடர்பு இருப்பது குறித்து ஜெகநாதராஜாவுக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவர் இருவரையும் எச்சரித்தும் அவர்கள் கேட்பதுபோல் இல்லை. தொழிலதிபர் ஜெகநாதராஜாவுக்கு ரூ.500 கோடி சொத்து உள்ள நிலையில், இந்த சொத்துகளை தானம் எழுதிவிடுவேன் என்று மனைவி மற்றும் மகளை அவர் மிரட்டியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சொக்கத்தாய் மற்றும் பிரியா இருவரும் தொழிலதிபரை தங்களது கள்ளக்காதலர்களுடன் திட்டமிட்டு கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, மனைவி, மகள் மற்றும் கள்ளக்காதலர்கள் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சொக்கத்தாய் மற்றும் பரியா இருவரும் முன்ஜாமின் வாங்கியதால், இவர்களை தவிர மற்ற மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். சொத்துக்காக மனைவி மற்றும் மகளே தொழிலதிபரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.