அந்த ரூ.992 கோடியை வசூலிச்சுட்டு வாங்க.. காங்.எம்எல்ஏக்களுக்கு ஷாக் கொடுத்த பாஜக!
கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள சொகுசு விடுதி அரசுக்கு 992 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளதை பாஜக சர்ச்சையாக்கியுள்ளது.
உத்தம புருஷர்களாக இருந்தால் அந்தப் பெரிய தொகையை வசூலித்து விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யலாமே என்றும் காங்கிரசை வறுத்தெடுத்துள்ளது. கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க "ஆபரேசன் தாமரை" என்று பெயரிட்டு காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு வலை விரித்தது. இதில் சில காங்கிரஸ் எம்எல்ஏக்களும் விழுந்தனர். கடும் எச்சரித்தும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 4 பேர் ஆப்சென்ட் ஆனதால் காங்கிரஸ் அப்செட்டானது.
இன்னும் சிலர் பா.ஜ.க. பக்கம் சாயலாம் என்ற பீதியில் கூட்டத்தில் 75 எம்எல்ஏக்களை அப்படியே "பேக் அப்" செய்து பெங்களூரு புறநகரில் ஈகிள்டன் ரிசார்ட்டில் சொகுசாக பத்திரப்படுத்தியது காங்கிரஸ். இப்போது ஈகிள்டன் ரிசார்ட் முறைகேடாக அரசு நிலத்தை அபகரித்துள்ள பிரச்னையை கர்நாடக பா.ஜ.க.கையில் எடுத்து காங்கிரசை விளாசுகிறது.
அரசு நிலம் 77 ஏக்கரை வளைத்துப் போட்டு அரசுக்கு 982 கோடி ரூபாய் அபராதம் செலுத்தாமல் இழுத்தடித்து வரும் ரிசார்ட்டில் எப்படி ஆளும் கட்சி எம்எல்ஏக்களை தங்க வைக்கலாம் என்று கேள்வி எழுப்பியுள்ளது.இது குறித்து கர்நாடக பாஜக டிவிட்டரில், மரியாதை புருஷர்களாக இருந்தால் சித்தராமையா, டி.கே.சிவக்குமார், தினேஷ் குண்டு ராவ் போன்றோர் அரசுக்கு வர வேண்டிய 982 கோடி ரூபாயை முதலில் வசூல் செய்யுங்கள்.
விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்யவாவது அந்தப் பணம் உதவுமே என்று சாடியுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள காங்கிரசோ, நாங்க ஒண்ணும் சும்மா தங்கல, வேணும்னா பில் செட்டில் பண்ணிட்டு காட்டுறோம் என்று பதிலடி கொடுத்துள்ளது. கர்நாடகாவில் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையிலான சர்ச்சை இப்போதைக்கு ஓயாது போல தெரிகிறது.