2019 பொதுத் தேர்தல்: 3 முனைப்போட்டியால் யாருக்கு லாபம் - பரபர சர்வே முடிவு!
வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க , காங்கிரஸ், பிற எதிர்க்கட்சிகள் மும்முனைப் போட்டி ஏற்பட்டால் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என ஒரு சர்வே வெளியாகியுள்ளது.
ஆனால் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் எனவும் தெரிய வந்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் 3 , 4 மாதங்கள் உள்ள நிலையில் ஆங்கில நாளேடு ஒன்று எடுத்துள்ள சர்வே முடிவுகளில் காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 180 முதல் 200 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 160 முதல் 175 தொகுதிகளையும், பிற மாநிலக் கட்சிகளான திரிணாமுல், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம், டி.ஆர்.எஸ், ஆம் ஆத்மி, பிஜு ஜனதா தளம் போன்றவை காங், பா.ஜ.க கூட்டணியில் சேராமல் தனித்துப் போட்டியிட்டால் 160 முதல் 180 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது.
2014 தேர்தலில் உ.பி., பீகார், குஜராத், ம.பி., ராஜஸ்தான், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், உத்தரகாண்ட், அரியானா, டில்லி போன்ற இந்தி பேசும் மாநிலங்களில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது.இத் தடவை இதில் உத்தரகாண்ட் தவிர்த்து வேறு எந்த மாநிலத்திலும் பா.ஜ.க.வுக்கு கூடுதல் தொகுதி கிடைக்காது என்றும் சர்வே தெரிவிக்கிறது. அதே வேளையில் இந்த மாநிலங்களில் உ.பி.தவிர்த்து மாநிலங்களில் காங்கிரஸ் இந்த முறை அதிக இடங்களை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக-காங்.
கூட்டணி அனைத்து தொகுதிகளையும் அள்ளிக் கொள்ளும் என்றும் அதிமுகவுக்கு 4 தொகுதிகளில் மட்டுமே ஓரளவுக்குத்தான் வாய்ப்பு என்றும் சர்வே முடிவில் அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுக்கப் பட்டுள்ளது. இதனால் 3 அணிகளாக பொதுத் தேர்தலை களம் கண்டால் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. தொங்கு பாராளுமன்றம் தான் என்று சர்வே கூறியுள்ளது. அதனால் தேர்தல் முடிவுகளுக்குப் பின் மாநிலக் கட்சிகளின் தயவில் தான் மத்தியில் அரசு அமையும் என்பதாக இந்த சர்வே முடிவில் கூறப்பட்டுள்ளது.