மாயாவதிக்கு ஆதரவு .. பாஜக எம்.பி.க்களுக்கு ஷூ மரியாதை தான் - ஜாட் தலைவர்கள் அறிவிப்பு!
இட ஒதுக்கீடு வழங்காமல் பா.ஜ.க ஏமாற்றி விட்டது. அக்கட்சி எம்பிக்களுக்கு ஷூ மரியாதை கொடுப்போம். வரும் தேர்தலில் மாயாவதியை ஆதரிப்போம் என "ஜாட்" தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம், ம.பி, ராஜஸ்தான், அரியானா , டெல்லி மாநிலங்களின் ஜாட் தலைவர்கள் கூறுகையில், எங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாக வாக்குறுதி கொடுத்ததால் கடந்த தேர்தலில் மோடியை ஆதரித்தோம். மோடி ஆட்சிக்கு வந்தவுடன் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் 30 உயிர்களை இழந்தோம். அதன் பின்னர் குழு அமைத்து இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மோடி உறுதி மொழி கொடுத்தும் 3 ஆண்டுகளாக கண்டு கொள்ளாமல் ஜாட் மக்களை பா.ஜ.க. ஏமாற்றி விட்டது. இதனால் வரும் தேர்தலில் மாயாவதியை ஆதரிக்கப் போகிறோம். ஏற்கனவே ஜாட் இனத்திற்கு மாயாவதி நிறைய நன்மைகள் செய்துள்ளார். 5 மாநிலங்களில் 131 தொகுதிகளில் ஜாட் மக்கள் அதிகம். எங்களை ஏமாற்றிய பா.ஜ.க எம்பிக்கள் மீண்டும் ஓட்டுக் கேட்டு வந்தால் "ஷூ" வைக் காட்டி ஜாட் மக்கள் மரியாதை கொடுப்பார்கள் என்று கூறியுள்ளனர். ஜாட் இனத் தலைவர்களின் இந்த அறிவிப்பு பா.ஜ.க.வுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.