கனிமொழிக்கு இவ்வளவு செல்வாக்கா? தலைமைக்கு வேப்பிலை அடிக்கும் கிச்சன் கேபினெட்
திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி தூத்துக்குடி மாவட்டத்தில் நடத்தி வரும் கிராமசபை கூட்டங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் அமோக ஆதரவு இருப்பதால் அக்கட்சியின் கிச்சன் கேபினெட் அதிர்ச்சியில் உள்ளதாம்.
ஸ்டாலின் முன்னெடுப்பில் தமிழகம் முழுவதும் கிராமசபை கூட்டங்களை நடத்தி வருகிறது திமுக. தூத்துக்குடி மாவட்டத்தில் 9 நாள் கனிமொழி பங்கேற்கும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதில் 4 நாட்கள் கூட்டத்தை நிறைவு செய்திருக்கிறார் கனிமொழி. இந்த கூட்டங்களில் பெண்களின் ஆதரவு கனிமொழிக்கு ஏக அளவில் பெருகி வருகிறது. அவரை நெருங்கி கைக்குலுக்கி கையில் முத்தமிட ஆர்வம் காட்டுகிறார்கள்.
‘நீங்க எங்க வீட்டு பிள்ளைம்மா’ என பெண்கள் உருகுவதில் மெய்சிலிர்த்து போகிறார் கனிமொழி. கனிமொழியின் கிராம சபை கூட்டத்தில் நடக்கும் சம்பங்களை துப்பறிந்து சொல்லுமாறு திமுக தலைமையின் கிச்சன் கேபினெட் , சிலரை ஏற்பாடு செய்திருக்கிறது.
அவர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டு நடக்கும் சம்பவங்களை கிச்சன் கேபினெட்டுக்கு அனுப்பி வைத்தபடி இருக்கிறார்கள். பெண்களின் ஆதரவு கனிமொழிக்கு ஏகோபித்த அளவில் இருப்பதை அறிந்து கிச்சன் கேபினெட் செம காட்டத்தில் இருக்கிறதாம்.
இதன் ஒரு பகுதியாக, கனிமொழிக்கு லோக்சபாவில் போட்டியிட வாய்ப்பு தரக்கூடாது. ராஜ்யசபா வாய்ப்பு மீண்டும் தரப்படும் என சொல்லி லோக்சபா ஒதுக்கீட்டை தவிர்க்கப் பாருங்கள். அதற்கு ஒப்புக்கொண்டால், ராஜ்யசபா தேர்தல் வரும் போது மீண்டும் வாய்ப்பு தரலாமா? வேண்டாமா? என அப்போதைய சூழலில் முடிவு செய்யலாம் வேறு விஷயம். இதையும் மீறி லோக்சபாதான் வேண்டும் என அடம்பிடித்தால் தூத்துக்குடியை தவிர்த்து வேறு தொகுதியை ஒதுக்கலாம். அவர் மீண்டும் எம்.பி.யாகக்கூடாது என்கிற ரீதியில் தலைமைக்கு வேப்பிலை அடிக்கும் பாணியில் தலையணை மந்திரம் ஓதுகிறதாம் கிச்சன் கேபினெட்.