பிரதமராக எல்லா தகுதியும் மம்தாவிடம் உள்ளது - கர்நாடக முதல்வர் குமாரசாமி

நாட்டின் பிரதமராவதற்கான அனைத்து தகுதிகளும் மம்தா பானர்ஜிக்கு உள்ளது என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் குமாரசாமி கூறுகையில், பிரதமர் மோடி மீது நாட்டு மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். 1977-ல் இந்திராவுக்கு எதிரான அலை போல் இந்த தேர்தலிலும் எதிரொலிக்கும்.

1977-ல் எந்தத் தலைவரையும் முன்னிறுத்தாமலே எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றன. அது போல் வரும் தேர்தலிலும் பிரதமர் வேட்பாளரை முன்கூட்டி அறிவிக்க வேண்டிய தேவை இல்லை.

ஒவ்வொரு மாநிலத்திலும் பலம் வாய்ந்த தலைவர்கள் உள்ளனர். அதனால் தேர்தலுக்குப் பின் பிரதமரை தேர்வு செய்யலாம்.

கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்த மம்தா பானர்ஜியின் திட்டமிட்ட செயல் அபாரமானது. அனைத்து எதிர்க்கட்சிகளையும் மதிக்கத் தெரிந்தவர். மம்தாவின் எளிமையிலும் எளிமையான தோற்றம், மே.வங்க முதல்வராக நல்ல நிர்வாகி என்று பெயர் எடுத்த மம்தாவுக்கு நாட்டை வழிநடத்தும் அனைத்து தகுதிகளும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் காங். தயவில் முதல்வர் பதவியில் இருக்கும் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் வரும் மக்களவைத் தேர்தலிலும் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட உள்ளது. இந்நிலையில் பிரதமர் பதவிக்கு ராகுலை விடுத்து மம்தா தான் லாயக்கானவர் என்று குமாரசாமி கூறியிருப்பது நிச்சயம் சலசலப்பை ஏற்படுத்தத் தான் போகிறது.

More News >>