சுட்டுக் கொல்வேன் என கணேஷ் மிரட்டினார் - காயமடைந்த கர்நாடக காங்.எம்எல்ஏ புகார்!
சொகுசு விடுதியில் தன்னைத் தாக்கிய எம்எல்ஏ கணேஷ் சுட்டுக்கொன்று விடுவேன் என மிரட்டியதாகவும் காயமடைந்த எம்எல்ஏ ஆனந்த்சிங் போலீசில் புகார் செய்துள்ளார்.
ஆட்சிக் கவிழ்ப்பு பீதியில் கர்நாடக காங். எம்எல்ஏக்கள் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் எம்எல்ஏக்கள் கணேஷ் மற்றும் ஆனந்த்சிங் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.
இதில் தலை, முகத்தில் காயங்களுடன் ஆனந்த்சிங் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். நேற்று காலை நடந்த இந்த அடிதடியை மாநில காங். தலைவர்கள் மறுத்து வந்தனர். ஆனந்த்சிங் நெஞ்சுவலியால் சேர்க்கப்பட்டதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் காயமடைந்த எம்எல்ஏ ஆனந்த்சிங் இன்று போலீசில் கணேஷ் மீது புகார் கொடுத்துள்ளார். பேசிக் கொண்டிருக்கும் போதே கணேஷ் கட்டையாலும், பிற பொருட்களை வீசி எறிந்தும் தாக்கினார்.
அவரை அமைச்சர் துக்காராமும் பிற எம்எல்ஏக்களும் பிடித்து இழுத்தனர். துப்பாக்கி இருந்தால் கொடுங்கள், இப்போதே சுட்டுக் கொன்று விடுகிறேன் என்று ஆபாசமாக கணேஷ் திட்டினார் என்றும் போலீசில் எம்எல்ஏ புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரால் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் விவகாரம் மேலும் குழப்பமாகி உள்ளது.