அரிய வகை இதய கோளாறு: சிறுமிக்கு வாழ்வளித்த அரசு மருத்துவர்கள்
தனியார் மருத்துவர்கள் சிகிச்சையளிக்க தயங்கிய அரிய வகை இதய நோய்க்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை இதயநோய் துறை மருத்துவர்கள் வெற்றிகரமாக சிகிச்சையளித்துள்ளனர்.
சாத்தூர், மார்க்கநாதபுரத்தை சேர்ந்தவர் விஜயகுமாரி. இவருக்கு நான்கு பெண்குழந்தைகள். இவர் பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவரது ஒரு மகள் மதுமிதாவுக்கு 13 வயதாகிறது. கடந்த ஆறு மாதங்களாக மதுமிதா அடிக்கடி உடல் நலிவுற்றுள்ளார். இருமலும் காய்ச்சலும் வந்த நிலையில், படுத்து உறங்க இயலாமல் இருமல் இருந்ததால் உட்கார்ந்தே தூங்க வேண்டிய நிலை இருந்துள்ளது.
மதுரையில் உள்ள இரண்டு பெரிய தனியார் மருத்துவமனைகளில் மகளை காட்டியுள்ளார் விஜயகுமாரி. அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இதற்கு வெளிநாட்டிலிருந்து மருத்துவர்கள் வந்தால்தான் சிகிச்சையளிக்க முடியும் என்று தயங்கியுள்ளனர்.
ஆகவே, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20ம் தேதி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் விஜயகுமாரி தன் மகளை அனுமதித்துள்ளார். இது குறித்து அம்மருத்துவமனையின் பொறுப்பு டீன் டாக்டர் சண்முகசுந்தரம், பிறப்பிலேயே இதயத்தில் வரும் அரிய வகை குறைபாடு மதுமிதாவுக்கு இருந்துள்ளது. 1812ம் ஆண்டு முதன்முதலில் இக்குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. உலகில் இதுவரை 100 முதல் 120 பேருக்குதான் இந்த அரிய வகை இதய குறைபாடு அறியப்பட்டுள்ளது. இதயத்தின் இடப்புற வெண்டிரிக்கிளின் சுவர் வீங்குவதால், இதயம் இரத்தத்தை செலுத்தும் அளவு பாதிக்கப்படும்.
உரிய சிகிச்சையளிக்கப்படாவிட்டால் இதயம் கிழிந்து உயிருக்கு ஆபத்து நேரக்கூடும். மதுமிதா அனுமதிக்கப்பட்ட நிலையில் இதய அறுவை சிகிச்சைக்கு ஏற்ற உடல் தகுதி இல்லாத காரணத்தால், இதய பிரிவு மருத்துவர்கள் அதற்கென சிகிச்சையளித்தனர். அவர்களின் கண்காணிப்பில் இருந்து வந்த மதுமிதாவுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 19ம் தேதி இதய அறுவை சிகிச்சை வல்லுநர் ரத்தினவேல் தலைமையிலான குழுவினர், வால்வு ஒன்றினை பொருத்தினர்.
இதய பிரிவு துறை தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் சிறப்பாக சிகிச்சையளித்துள்ளனர். மதுமிதாவின் உயிரைக் காப்பாற்றுவதற்கான சிகிச்சையை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக அளித்துள்ளோம். தொடர்ந்து மதுமிதா பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தனியார் மருத்துவமனைகள் தயங்கிய வேளையில் உரிய சிகிச்சை அளித்து ஏழைப் பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய அரசு மருத்துவர்களை அப்பகுதி மக்கள் பாராட்டுகின்றனர்.