அஞ்சே அஞ்சுதான்.. உலகம் முழுமைக்கும் வாட்ஸ்அப் கட்டுப்பாடு

வாட்ஸ்அப் செயலியின் தற்போதைய வடிவத்தை உலகின் எந்தப் பகுதியிலில் பயன்படுத்தினாலும் பதிவொன்றை ஒரே நேரத்தில் ஐந்து நபர்களுக்கு மட்டுமே ஃபார்வர்டு செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இது ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்தியா தவிர வேறு நாடுகளில் இருப்போர் ஒரே நேரத்தில் 20 நபர்களுக்கு மட்டுமே பதிவுகளை முன்னனுப்ப முடியும். இந்தியாவில் ஏறத்தாழ 25 கோடி பேர் வாட்ஸ்அப்பின் தொடர் பயனர்களாக இருக்கின்றனர். இந்தியர்களே அதிக அளவு பதிவுகள், செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஃபார்வர்டு செய்வதாகவும், நெருங்கியவர்களுக்கு மட்டுமே பதிவுகளை முன்னனுப்பும்படி இந்தியாவில் முன்னரே கட்டுப்பாடு நடைமுறைக்கு வந்துவிட்டது.

ஃபார்வேர்டு செய்யப்பட்ட செய்திகளுக்கு அவை 'ஃபார்வேர்டு' செய்யப்பட்டவை என்ற அடையாளமும் கொடுக்கப்பட்டது. போலி செய்திகள், தேவையற்ற தகவல்கள், அதிகாரப்பூர்வமற்ற விஷயங்கள் வெகுவேகமாக பரவுவதை தடுப்பதற்காக இது நடைமுறைக்கு வந்துள்ளது.

கடந்த ஆறு மாதங்கள் பரீட்சார்த்த ரீதியில் இருந்த இந்த முயற்சி கிடைத்த பின்னூட்டங்களின் அடிப்படையில் தற்போது அதிகபட்சம் ஐந்து நபர்களுக்கு ஃபார்வேர்டு செய்யும் கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே இப்போது இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் எல்லா நாடுகளிலுமே ஒரே நேரத்தில் ஐந்துக்கும் மேற்பட்டோருக்கு வாட்ஸ்அப் பதிவுகளை ஃபார்வேர்டு செய்ய இயலாது.

More News >>