லோக்சபா தேர்தல்: விசிகவுக்கு சிதம்பரம் தொகுதி மட்டும்...திமுக தடாலடி முடிவு!
லோக்சபா தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு ஒரே ஒரு இடத்தை ஒதுக்குவது என திமுக முடிவு செய்துவிட்டது.
இதைப் பற்றி ஸ்டாலினிடம் பேசிய பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள், ' அவர் நம்முடன் இருக்கிறார். தெளிவாக காங்கிரஸ் கட்சியுடனும் நட்பில் இருக்கிறார் திருமாவளவன். அவர் மோடி எதிர்ப்பு அரசியலைச் செய்கிறார். நாமும் அதே அரசியலைத்தான் செய்கிறோம். இந்தச் சூழ்நிலையில், ஏதோ ஒரு பிரச்னையில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு சீட் கொடுக்காமல் விட்டுவிட்டால் தலித் வாக்குகள் அனைத்தும் உங்கள் தலைமைக்கு எதிராகப் போய்விடும். அவர்கள் பக்கம் இருக்கும் 23 சதவிகித வாக்குகள் முக்கியமானவை. கூட்டணிக்குள் ஏதாவது குழப்பம் நடந்து திருமாவளவன் வெளியேறிவிட்டால் திமுக எதிர்காலத்துக்கும் நல்லதல்ல. அவர்களுக்கு 2 சீட் கொடுக்காமல், சிதம்பரத்தை மட்டும் கொடுத்துவிட்டு கூட்டணிக்குள் வைத்துக் கொள்வோம்' எனக் கூறியுள்ளனர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு சீட் கொடுத்தபோது, அறிவாலயத்தில் வைத்தே வி.சி.க தொண்டர் ஒருவர் தீக்குளிப்பு முயற்சியில் இறங்கினார். இதையடுத்து, திருவள்ளூர் தொகுதியை அவரது கட்சியைச் சேர்ந்த ரவிக்குமாருக்குக் கொடுத்தார் கருணாநிதி.
2 சீட்டை விரும்பாத துரைமுருகன், 'உங்களுக்கெல்லாம் ஒரு சீட்டே அதிகமப்பா...' எனக் கமெண்ட் அடித்ததையும் திருமாவளவன் ரசிக்கவில்லை. இதன் விளைவுகளை உணர்ந்துதான், திருமாவளவனுக்கு உரிய முக்கியத்துவம் தருமாறு மா.செக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- அருள் திலீபன்