வெளியே வருதோ பூனைக்குட்டி? லயோலா கல்லூரி கண்காட்சி விவகாரத்தில் ராமதாசுக்கு எச்.ராஜா நன்றி!

சென்னை லயோலா கல்லூரியில் சர்ச்சைக்குள்ளான கண்காட்சி விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்த பாமக நிறுவனர் ராமதாசுக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை லயோலா கல்லூரி மற்றும் மாற்று ஊடக மய்யம் சார்பில் 6ம் ஆண்டு வீதி விருது விழா நடைபெற்றது. இந்த விழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர்.

இது தவிர ஓவிய கண்காட்சியும் நடைபெற்றது. குறிப்பாக, சாதி, வன்முறை, பாலின வன்முறை உள்பட பல தலைப்புகளில் ஓவியங்கள் வைக்கப்பட்டன.மேலும், ஆளும் பாஜக அரசின் நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையிலும் ஓவியங்கள் இடம்பெற்றன. குறிப்பாக, பாரத தாயை மீ டூ விவகாரத்தில் ஒப்பிட்டு தீட்டப்பட்டிருந்த ஓவியம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு பாஜக தலைவர்களான எச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். பிரச்னை பெரிதாக ஆரம்பித்ததை அடுத்து, லயோலா கல்லூரி மன்னிப்பு கேட்டு அறிக்கையை வெளியிட்டது.

இந்த விவகாரத்தில் பாஜகவை தவிர, வேறு எந்த கட்சியும் கருத்து தெரிவிக்காமல் இருந்தது. இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ், சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் சில ஓவியங்கள் இடம்பெற்றிருந்தது கண்டிக்கத்தக்கது. கலை வடிவங்கள் அனைவரையும் மகிழ வைக்கவே தவிர, யாரையும் காயப்படுத்துவதற்கு அல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும் என்று தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்கு, எச்.ராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தியதைக் கண்டித்த பாஜக அல்லாத ஒரே அரசியல் தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

More News >>