பாஜக மேடையிலேயே எய்ம்ஸ்-க்கு அடிக்கல் நாட்டும் மோடி- வெடிக்கும் சர்ச்சை!
பிரதமர் மோடி பங்கேற்கும் மதுரை தோப்பூரில் நடைபெறுவதாக இருந்த எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டுவிழா இடம் மாற்றப்பட்டுள்ளது. பாஜக பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டு வார் என்ற அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வர வேண்டும் என்பது தான். இதோ அதோ என்று பெரும் இழுபறிக்கிடையே மத்திய அரசின் அனுமதி கிடைத்து வரும் 27-ந் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார் என்ற அறிவிப்பும் வெளியாகியது. 27-ந் தேதி காலை 11.45 மணிக்கு எய்ம்ஸ் அமையும் தோப்பூரில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவதாகவும், அதன் பின்னர் மதுரை மண்டேலா நகரில் நடக்கும் பா.ஜ.க. பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுவதாகவும் திட்டம். ஆனால் தற்போது பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி பா.ஜ.க. பிரச்சாரக் கூட்ட மேடையிலேயே எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசுத் திட்டம் அடிக்கல் நாட்டு விழாவை பா.ஜ.க.கட்சிப் பொதுக் கூட்டத்தில் பிரதமர் எப்படி நடத்தலாம் என்ற பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.