சபரிமலை தீர்ப்புக்கு எதிரான மறு சீராய்வு மனு - அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
சபரிமலை தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மறுசீராய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
சபரிமலை ஐயப்பனை அனைத்து வயது பெண்களும் தரிசிக்கலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு பா.ஜ.க உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 4 மாதங்களாகவே பெரும் சர்ச்சை நிலவுகிறது. இதற்கிடையே தீர்ப்பை மறு சீராய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முன் இன்று விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே தீர்ப்பு வழங்கிய அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதி இந்து மல்கோத்ரா விடுப்பில் இருப்பதால் உடனடியாக விசாரிக்க முடியாது என்றும் அடுத்த மாதம் விசாரணை நடத்தப்படும் என்றும் தலைமை நீதிபதி அறிவித்தார்.