வாக்கு எந்திரத்தில் முறைகேடு புகார் - பின்னணியில் காங். என பாஜக குற்றச்சாட்டு!

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு புகாரின் பின்னணியில் காங்கிரஸ் இருப்பதாக பாஜக குற்றம் சுமத்தியுள்ளது.2014 பொதுத்தேர்தலின் போது பாஜகவுக்கு ஆதரவாக மின்னணு வாக்குப்பதிவு எந்தி ரங்களில் முறைகேடு செய்யப்பட்டதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. லண்டனில் நேற்று செய்தியாளர்களிடையே ஸ்கைப் மூலம் அமெரிக்க வாழ் இந்தியரான சையத் சுஜா என்பவர், எப்படியெல்லாம் மின்னணு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டது என்று விளக்கிக் கூறினார். இதனால் 201 தொகுதிகளில் காங்கிரசின் வெற்றி வாய்ப்பு பறிபோனதாகவும் சையத் சுஜா தெரிவித்திருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டை தலைமை தேர்தல் ஆணையம் அடியோடு மறுத்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை எந்த வகையிலும் ஹேக் செய்ய முடியாது .வேறு முறைகேடுகள் நடப்பதற்கும் வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கமளித்தது. இந்நிலையில் லண்டனில் செய்தியாளர் நிகழ்ச்சியை நடத்தியதன் பின்னணியில் காங்கிரஸ் தான் உள்ளது பாஜக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றம் சுமத்தியுள்ளார். லண்டன் கூட்டத்தில் கபில் சிபல் பங்கேற்றதற்கு என்ன காரணம்? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். 2014 தேர்தலின் போது ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் தான். அப்போது எப்படி பாஜக முறைகேடு செய்திருக்க முடியும்.

வரும் தேர்தலிலும் தோல்வி நிச்சயம் என்பது காங்கிரசுக்கு தெரிந்து விட்டது. அதனால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு என்ற காரணத்தை கூறி தப்பிக்கப் பார்க்கிறது காங்கிரஸ் என்றும் ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.

More News >>