ஸ்டெர்லைட் திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் மீண்டும் மனு!
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி தரக் கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளது.தூத்துக்குடி போராட்டத்தின் எதிரொலியாக ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது தமிழக அரசு . இதை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சில நிபந்தனைகளுடன் ஆலையை திறக்க அனுமதி வழங்கியது. இந்த அனுமதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது. தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்குத் தொடர, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தடையேதும் இல்லை என்று உச்சநீதிமன்றம் ஜனவரி முதல் வாரம் தீர்ப்பளித்தது.
இப்படி பலகட்ட சட்டப் போராட்டத்தின் மூலம் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி பெற்றாலும் தமிழக அரசு இன்னும் ஒப்புதழ் வழங்கவில்லை. கடந்த 8 மற்றும் 10-ந் தேதிகளில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கவும், மின்சாரம் வழங்கவும் அனுமதி கோரி கடிதம் எழுதியதற்கு தமிழக அரசு இன்னும் பதில் தர வில்லை. எனவே ஆலையைத் திறக்க உத்தரவிட வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் மனுத்தாக்கல் செய்யப் பட்டுள்ளது.