மேகதாது அணை விவகாரத்தில் பாஜக அரசுடன் ஒத்துழைக்கும் போக்கினை தமிழக முதல்வர் கைவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
மேகதாதுவில் புதிய அணை கட்டும் பிரச்சினையில் தாமதிக்காமல் தமிழகத்தின் ஒப்புதல் இன்றி அளிக்கப்பட்டுள்ள விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
'காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவது தொடர்பான அறிக்கையை தமிழக அரசுக்கு 25.9.2018 அன்று அனுப்பியதாகவும் அதற்கு எவ்வித பதிலும் தமிழக அரசு அளிக்கவில்லை என்றும்" கர்நாடக அரசு திடீரென்று ஒரு கடிதத்தை மத்திய அரசுக்கு எழுதியிருப்பது, தமிழக மக்களுக்கு குறிப்பாக, காவிரி தீரத்தின் விவசாயிகளுக்கு அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.
2015-16 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையிலேயே, கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு 25 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்தது. அப்போதிலிருந்து அ.தி.மு.க. அரசு போதிய கவனம் செலுத்தாமல் அலட்சியமாக இருந்த காரணத்தால் ஒவ்வொரு கட்டத்திலும் அரசியல் அடிப்படையில் கர்நாடகா அரசுக்கு ஆதரவாகவே மத்திய பாஜக அரசு செயல்பட்டு, இறுதியில் 22.11.2018 அன்று 'புதிய அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யலாம்" என்று அனுமதியையும் கர்நாடக அரசுக்கு வழங்கி, மத்திய பாஜக அரசு தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடித்தது.
இது தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போதும்கூட மத்திய அரசு தமிழக மக்களின் உணர்வுகளையும் - தமிழக விவசாயிகளின் கவலையையும் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் கர்நாடகாவில் கிடைக்கும் தேர்தல் ஆதாயத்தை மட்டுமே மனதில் கொண்டு தமிழகத்திற்கு எதிராக ஓரவஞ்சனையுடன் மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.
"திட்ட அறிக்கை தயாரிப்பதற்குத்தானேஅனுமதி கொடுத்தோம் .அணை கட்டுவதற்கு முன்பு தமிழக அரசின் கருத்தை கேட்ட பிறகுதான் முடிவெடுப்போம்' என்று மத்திய அரசு ஒப்புக்குப் பேசி வந்தாலும், மத்திய அமைச்சராக இருக்கும் நிதின்கட்கரி "தமிழகத்தின் அனுமதியின்றி அணைகட்ட நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்று கூறினாலும் கர்நாடக அரசின் அனைத்து சட்டவிரோத முயற்சிகளுக்கும், ஒரு நீண்டகாலத் திட்டத்துடன் மத்திய பாஜக அரசு உற்ற துணையாக இருந்து தமிழக விவசாயிகளுக்கும் தமிழ்நாட்டுக்கும் துரோகம் இழைத்து வருகிறது. இப்படி ஒரு சூழ்நிலையில் தான் "நாங்கள் முன்கூட்டியே அனுப்பிய அறிக்கை மீது தமிழக அரசு எந்தக் கருத்தையும் சொல்லவில்லை" என்று புதிய காரணம் ஒன்றை தெரிவித்து மேகதாது அணை கட்டுவது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் இப்பொழுது வழங்கியிருக்கிறது கர்நாடக அரசு.
தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இன்றி அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என்று நாடகமாடிய மத்திய அரசும் இந்த திட்ட அறிக்கையை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டிருக்கிறது. "தமிழகத்தின் ஒப்புதல் இல்லாத இந்த அறிக்கையினை நாங்கள் பரிசீலிக்க மாட்டோம்" என்று இதுவரை மத்திய அரசு வெளிப்படையாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. "எங்கள் கருத்தைக் கேட்காமல் தயாரிக்கப்பட்ட அறிக்கையை எப்படிப் பெற்றுக் கொண்டீர்கள்" என்று இதுவரை முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிச்சாமியும் கேள்வி கேட்கவில்லை. மத்திய பாஜக அரசும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் சேர்ந்து செய்யும் இந்த சதி கூட்டணியில் தமிழக நலன்களும், தமிழக விவசாயிகளும் தமிழகத்தின் காவிரி உரிமைகளும் 'அந்தோ பரிதாபம்' என்று நம் கண்ணெதிரில் பறிபோய்க் கொண்டிருக்கிறது. அலட்சியத்தின் மொத்த உருவமாக மேகதாது அணை பிரச்சினையில் முதலமைச்சர் செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது..
ஆகவே மேகதாதுவில் புதிய அணை கட்டும் பிரச்சினையில் இனிமேலும் தாமதிக்காமல் "தமிழகத்தின் ஒப்புதல் இன்றி அளிக்கப்பட்டுள்ள விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்” என்று மத்திய பாஜக அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்றும், அதே வாதத்தினை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் முன் வைத்து புதிய மேகதாது அணை கட்டுவதற்கு உடனடியாக தடை பெற வேண்டும் என்றும் முதலமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன். 'சட்ட நடவடிக்கைகள் எடுப்போம். எடுப்போம்' என்று தமிழக மக்களை ஏமாற்றி கொண்டு, தமிழக விவசாயிகளின் ஒவ்வொரு உரிமையும் பறிபோய் அவர்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்படுவதற்கு திரைமறைவில் மத்திய பாஜக அரசுடன் ஒத்துழைக்கும் போக்கினை முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிச்சாமி உடனடியாக கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.