சீனாவின் செயலிகள்: இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

ஹேலோ, ஷேர்இட், டிக்டோக், யூசி பிரௌஸர், விகோ வீடியோ, பியூட்டி பிளஸ் கிளப்ஃபேக்டரி எவ்ரிதிங், நியூஸ்டாக், யூசி நியூஸ் மற்றும் விமேட் போன்ற சீன செயலிகள், இந்தியாவிலுள்ள பயனர்களிடமிருந்து எப்படிப்பட்ட, எந்த அளவுக்கான தரவுகளை பெறுகின்றன? அவற்றை எப்படி பயன்படுத்துகின்றன என்பது குறித்த ஆய்வு ஒன்றை எக்கானமிக்ஸ் டைம்ஸ் செய்தி நிறுவனம் பூனாவை சேர்ந்த அமைப்பு மூலம் செய்துள்ளது.அந்த ஆய்வின் மூலம் 57 விழுக்காடு செயலிகள் அதிக அளவில் பயனர்களிடமிருந்து அனுமதியை கோருகின்றன என்றும் 90 விழுக்காடு செயலிகள் அவற்றின் பயன்பாட்டுக்குத் தேவையற்ற போதிலும் பயனரின் காமிரா மற்றும் ஒலிவாங்கியாகிய மைக்ரோபோன் இவற்றின் செயல்பாடுகளை கண்காணிக்கும் அனுமதியை பெற்றுக்கொள்வதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த செயலிகள் தாங்கள் பயனர்களிடமிருந்து சேகரிக்கும் தரவுகளை தங்களுக்குள் மற்றும் இந்தியாவுக்கு வெளியே இருக்கும் மூன்றாம் நபரிடம் பகிர்ந்து கொள்கின்றனவா என்பது குறித்தும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. சீன மின்னணு வர்த்தக பெருநிறுவனமான அலிபாபாவின் டிக்டோக் மற்றும் யூசி பிரௌஸர் ஆகியவற்றுக்கு கோடிக்கணக்கான பயனர்கள் உள்ளனர். உலகம் முழுவதும் 43 கோடி பயனர்களை கொண்டிருக்கும் யூசி பிரௌஸரை இந்தியாவில் மட்டும் 13 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

ஏழு வெளிநாட்டு முகமைகளுக்கு இந்தச் செயலிகள் மூலம் தரவுகள் கிடைப்பதாகவும் அவற்றுள் 69 விழுக்காடு தரவுகள் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு அனுப்பப்படுவதாகவும் கூறப்படுகிறது. டிக்டோக் (TikTok) தன்னிடமுள்ள தரவுகளை சீன தொலைதொடர்பு நிறுவனத்தோடும் (China Telecom), விகோ வீடியோ, டென்சென்ட் (Tencent) என்ற நிறுவனத்துடனும், பியூட்டிபிளஸ், மெய்டு (Meitu) உடனும், க்யூக்யூ மற்றும் யூசி பிரெஸர் ஆகியவை தங்கள் தாய் நிறுவனமான அலிபாபாவுடனும் பகிர்ந்து கொள்கின்றன.இந்திய சந்தைகளில் அதிகமாக விற்பனையாகும் ஸோமி மற்றும் விவோ போன்ற சீன நிறுவனங்களின் தயாரிப்புகளான ஸ்மார்ட்போன்கள் இந்திய இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்று பவண் தக்கல் என்ற வல்லுநர் கருதுகிறார். தரவுகளை பாதுகாக்க போதுமான கொள்கை முடிவு இன்னும் இந்தியாவில் நிலையில் அயல்நாட்டு நிறுவனங்களால் சேகரிக்கப்படும் இதுபோன்ற தரவுகள் எப்படி பயன்படுத்தும் என்ற கவலை பரவலாக எழுந்துள்ளது.

ஊபர், ஸ்விக்கி போன்ற வாகன சேவை மற்றும் பொருள்களை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சென்று கொடுக்கும் செயலிகள் பயனர்களின் துல்லியமான இருப்பிட விவரத்தை கேட்கலாம். ஆனால், யூசி பிரௌஸர் அதன் பணிக்கு பொருத்தமேயில்லாமல் துல்லிய இருப்பிட விவரத்தை சேகரிக்கிறது என்று இந்த ஆய்வில் ஈடுபட்ட ஆர்க்கா நிறுவனத்தின் நிறுவனர்களுள் ஒருவரான ஷிவாங்கி நட்கர்னி கூறுகிறார்.இந்த ஆய்வு முடிவுகள் குறித்து தங்கள் கருத்தினை கிளப் ஃபேக்டரி, ஷேர்இட் மற்றும் விமேட் நிறுவனங்கள் இன்னும் தெரிவிக்கவில்லை. டிக்டாக் செயலியின் உரிமைதாரரான பைட்டான்ஸ் நிறுவனம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. யூசி பிரௌஸர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் மைக்கேல் ஹூ, "தவிர்க்க இயலாத நிலையிலும் பயனர் அனுபவங்களை மேம்படுத்தவுமே அனுமதிகள் பெறப்படுகின்றன. இந்த அனுமதிகளை வழங்குவது பயனரின் விருப்பத்தை மட்டுமே பொறுத்தது. பயனரே அதை கட்டுப்படுத்த இயலும்," என்று தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் வழங்கி என்னும் தங்கள் சர்வர்களை இந்தியாவிலேயே அமைக்க முயற்சிப்பதாக தெரிவித்துள்ளன. ஸோமி பயனர்களின் தரவுகளை சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவிலிருந்து அமேசான் வெப் மற்றும் இந்தியாவில் அமைந்துள்ள மைக்ரோசாஃப்ட் அஸ்யூர் வழங்கிகளுக்கு கிளவுட் கட்டமைப்புக்கு மாற்ற இருப்பதாக கூறுகிறது. ஒன்பிளஸ் நிறுவனமும் இந்திய வாடிக்கையாளர்களுக்காக தங்கள் வழங்கிகளை இந்தியாவில் அமைக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. விவோ நிறுவனம் தாங்கள் அரசின் எல்லா சட்டதிட்டங்களுக்கும் எப்போதும் உட்பட்டு நடப்பதாகவும் பயனர்களின் தரவுகளை கொண்டு பணம் பார்க்கும் எண்ணம் தங்களுக்கு இல்லையென்றும் தெரிவித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பு முக்கியம்... அதுதான் நாம் சொல்ல விரும்புவது!

More News >>