சபரிமலை சென்ற பாவத்தை கழுவிட்டு வா.... வீட்டை விட்டு துரத்தப்பட்ட கனகதுர்கா!

சபரிமலை ஐயப்பனை தரிசித்த விவகாரத்தில் கேரள பெண் கனகதுர்காவுக்கு சோதனை மேல் சோதனை . குடும்பத்தாரால் அடித்து காயப்படுத்தப்பட்ட துர்கா இப்போது வீட்டை விட்டே விரட்டியடிக்கப்பட்டு காப்பகத்தில் தஞ்சமடைந்துள்ளார்.கடந்த ஜனவரி 2-ந்தேதி ஐயப்பனை பிந்து என்ற பெண்ணுடன் சென்று தரிசித்தார் மலப்புரத்தைச் சேர்ந்த 40 வயதான கனகதுர்கா. கனகதுர்கா சபரிமலை சென்றதில் அவருடைய குடும்பத்தினருக்கு உடன்பாடு இல்லை. இதனால் அவரை வீட்டில் சேர்க்க மாட்டோம் என்று கூறி விட்டனர். வெளியில் இருந்தும் மிரட்டல் வந்ததால் அச்சத்தில் நண்பர்களின் வீடுகளில் சில நாட்கள் தலைமறைவாக இ ருந்தார். பின்னர் கடந்த வாரம் மலப்புரத்தில் வீட்டுக்கு திரும்பிய கனகதுர்காவை அவருடைய மாமியாரும் குடும்பத்தினரும் அடித்து உதைத்ததில் காயமடைந்து சிகிச்சைக்கு சேர்ந்தார்.

மாமியார் தாக்கியதாக துர்கா போலீசில் புகார் செய்ய, மருமகள் தான் தன்னைத் தாக்கினார் என்று மாமியாரும் புகார் செய்ய பிரச்னை முற்றிவிட்டது. இதனால் இனிமேல் கனகதுர்காவை வீட்டிற்குள் சேர்க்கவே முடியாது என அவருடைய கணவரும் கூறிவிட்டார். சபரிமலை பாவத்தை கழுவி விட்டு, பொதுமக்கள் மத்தியில் பகிரங்க மன்னிப்பு கேட்டால் மட்டுமே சேர்ப்போம் என்றும் கணவர் திட்டவட்டமாக கூறியதால் இப்போது மலப்புரத்தில் அரசு காப்பகத்தில் துர்கா தஞ்சமடைந்துள்ளார். கனகதுர்காவுக்கு கேரள அரசு 24 மணி நேர பாதுகாப்பு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More News >>