கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக.... உக்கிரமான சூரிய ஒளியால் போட்டியில் தடங்கல்!
உக்கிரமான சூரிய ஒளியால் நேப்பியர் ஒரு நாள் போட்டியில் தடங்கல் ஏற்பட்டது.
மழை, போதிய வெளிச்சமின்மை, ரசிகர்களின் கலாட்டா , வன்முறை, வீரர்களுக்கிடையே வாக்குவாதம் போன்ற காரணங்களுக்காகத்தான் சில நேரங்களில் போட்டிகள் பாதிக்கப்படுவது வழக்கம். ஆனால் நேப்பியரில் இன்று நடக்கும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விசித்திரமான நிகழ்வு அரங்கேறியது.
158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியாவின் ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. 11வது ஓவரின் முதல் பந்தை நியூசிலாந்து வீரர் பெர்குசன் வீச இந்திய பேட்ஸ்மேன் தவான் எதிர்கொண்டார்.
ஆனால் பந்தே தெரியாத அளவுக்கு சூரியனின் உக்கிரமான ஒளி தவானின் கண்ணை கூசச் செய்தது. தன்னால் ஆட முடியாத நிலையை நடுவரிடம் தவான் முறையிட்டார். அம்பயருக்கும் அதே பிரச்னை தான் போலும். உடனே ஆட்டத்தை நிறுத்தி விட்டார். சூரிய ஒளி தாக்கம் குறைந்த பின் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் அரைமணி நேரம் பாதிக்கப்பட்டதால் ஒரு ஓவரும் குறைக்கப்பட்டது.
கிரிக்கெட் சரித்திரத்தில் சூரிய ஒளியின் தாக்கத்தால் ஆட்டம் பாதிக்கப்பட்டது இதுதான் முதல் தடவையாம். இதற்கு ஆடுகளத்தில் பிட்ச் கிழக்கு மேற்காக தவறாக அமைத்து விட்டதும் ஒரு காரணம். பொதுவாக கிரிக்கெட் மைதானங்களில் பிட்ச் வடக்கு தெற்காகத்தான் இருக்கும்.