ஜெயலலிதா குற்றவாளி எனப் பேசக் கூடாது! - நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக் காட்டிய இன்பதுரை
ஜெயலலிதாவை குற்றவாளி என குறிப்பிடக் கூடாது என அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை கூறியுள்ளார்.
ராதாபுரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இன்பதுரை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசின் சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவகம் கட்ட எந்த தடையுமில்லை. ஏனெனில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும்போது ஜெயலலிதா உயிருடன் இல்லை.
உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ஒருவர் தனது விடுதலை நேரத்தில் மரணமடைந்து விட்டால் அதற்கு பிறகு வழங்கப்படும் எந்த நீதிமன்ற தீர்ப்பும் அவரை குற்றவாளியாக்க முடியாது என்று கபூர் Vs தமிழ்நாடு என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கி உள்ளது.
அந்த தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக உயர்நீதிமன்றத்தால் ஏற்கனவே நிரபராதி என விடுதலை செய்யப்பட்டுவிட்ட நிலையில் மறைந்துவிட்ட ஜெயலலிதாவை தற்போதும் குற்றவாளிதான் என்று கூறும் வாதத்தை ஏற்கமுடியாது" என்று சென்னை உயர்நீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.
இத்தீர்ப்பின் அடிப்படையில் இனி எவராவது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை குற்றவாளி என்று பேசினால் அவ்வாறு பேசுபவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனைக்கு உள்ளாவார். இவ்வாறு இன்பதுரை தெரிவித்துள்ளார்.