பாஜக கூட்டணியை எதிர்க்கும் அதிமுக அமைச்சர்கள், எம்.பிக்களுக்கு டெல்லியின் ஷாக் ட்ரீட்மெண்ட்!
லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியை எதிர்க்கும் அதிமுக அமைச்சர்கள், எம்.பிக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க திட்டமிட்டிருக்கிறதாம் டெல்லி மேலிடம்.
அதிமுகவின் அணிகளை இணைத்து எப்படியாவது கூட்டணியை உருவாக்கிவிட வேண்டும் என்பதில் பாஜக மேலிடம் உறுதியாக இருக்கிறது. ஆனால் அதிமுகவில் பாஜகவுடனான கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
கோட்டையில் கடந்த வாரம் இது தொடர்பாக அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடியார் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது வழக்குகள், ரெய்டுகளில் சிக்கியிருக்கும் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான அமைச்சர்கள் பாஜகவுடனான கூட்டணிக்கு கடும் எதிர்ப்பை காட்டியுள்ளனர்.
மேலும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் கட்சி தொண்டர்கள் கூட நமக்கு வாக்களிக்கமாட்டார்கள்; அது தினகரனுக்கே சாதகமாகிவிடும் எனவும் கூறியுள்ளனர். அதேபோல் மூத்த எம்.பிக்களிடமும் எடப்பாடியார் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
பெரும்பாலான எம்.பிக்களும் பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இத்தகவலை பாஜக மேலிடத்துக்கும் எடப்பாடியார் அனுப்பியிருக்கிறார்.
ஆனால் பாஜக மேலிடமோ, எங்களுடனான கூட்டணியை எதிர்க்கும் அமைச்சர்கள் யார் என்கிற பட்டியலை தாங்க.. அவர்களை பைல்களை நாங்கள் அனுப்புகிறோம். அதை வைத்து சமாளிக்க முடியும் என மந்திராலோசனை கூறியுள்ளது. அதேபோல் எங்கள் கூட்டணி வேண்டாம் என்கிற எம்.பிக்கள் யார் என்பதை சொல்லுங்க.. உங்களுக்கே தெரியாமல் எங்களிடம் அவர்கள் சாதித்த விஷயங்களை சொல்கிறோம் எனவும் பாஜக மேலிடம் கூறியுள்ளது.
பாஜகவின் அட்வைஸ்படி எடப்பாடியார் நடவடிக்கை மேற்கொண்டால் அதிமுகவில் ‘கலகக் குரல்’ பகிரங்கமாக வெடிக்குமா? அல்லது எதிர்ப்புக் குரல்கள் அடங்கிப் போகுமா? என்பதுதான் இப்போதைய ஹாட் விவாதம்.
-எழில் பிரதீபன்