சென்னை ஆளுநர் மாளிகை முன் போலீசாருடன் திமுகவினர் தள்ளு முள்ளு - ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்ததால் பதற்றம்!
சென்னையில் ஆளுநர் மாளிகை நோக்கி சென்ற திமுகவினர் தடுத்து நிறுத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
போலீசாருடன் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கொடநாடு கொள்ளை, தொடர் கொலைகள் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடக் கோரி ஆளுநர் மாளிகை முன் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
இதில் பங்கேற்க ஆளுநர் மாளிகை நோக்கி திமுகவினர் பெருமளவில் திரண்டனர். ஆனால் போலீசார் ஆளுநர் மாளிகைக்கு சற்றுத் தொலைவிலேயே தடுப்புகளை அமைத்து திமுகவினரை தடுத்து நிறுத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. போலிசாருடன் திமுகவினர் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
இதன் பின்னர் ஆளுநர் மாளிகை அருகே சென்னையின் 4 மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், ஜெ.அன்பழகன், சேகர்பாபு, சுதர்சனம் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மு.க.தமிழரசு, எம்எல்ஏக்கள் உட்பட திமுகவினர் பெருமளவில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டம் தொடர்ந்ததால் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.