சிறிசேனா படுகொலை சதித்திட்டத்தில் ராஜபக்சே மகனுக்கு தொடர்பு?
இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவை படுகொலை செய்யும் சதித் திட்டத்தில் மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சேவுக்கு தொடர்புள்ளதா? என்பது குறித்து அந்நாட்டு குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி உள்ளனர்.
தம்மை கொலை செய்ய இந்தியாவின் ரோ சதித் திட்டம் தீட்டியிருப்பதால அண்மையில் மைத்திரிபால சிறிசேனா குற்றம்சாட்டியிருந்தார். இது சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சதித் திட்டம் தொடர்பாக இந்தியர் ஒருவரையும் இலங்கை அரசு கைது செய்திருந்தது. இந்நிலையில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சேவிடம் இச்சதித் திட்டம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
சிறிசேனாவை கொலை செய்யும் சதித் திட்டத்தில் தொடர்புடைய இந்தியருக்கும் நாமல் ராஜபக்சேவுக்குமான உறவு குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.