திரெளபதியை துகிலுறியும் போஸ்டர் - தெலுங்கானாவில் வெடித்த சர்ச்சை!
தேர்தல் ஆணையத்துக்கு எதிரான காங்.போராட்டத்தில் திரெளபதியை துகிலுறியும் காட்சியுடன் போஸ்டர் வெளியிட்டதற்கு தெலுங்கானா மாநி லத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சமீபத்தில் நடந்த தெலுங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் சந்திரசேகர் ராவின் டி.ஆர்.எஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. தேர்தலில் பல தில்லு முல்லுகள் நடந்ததாகவும், அதனை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை என்பதும் காங்கிரசின் குற்றச்சாட்டு.தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஐதராபாத்தில் காங்கிரஸ் நேற்று போராட்டம் நடத்தியது. போராட்ட அழைப்பிதழ் போஸ்டரில் திரெளபதியை துகிலுறியும் காட்சி இடம் பெற்றிருந்தது.
திரெளபதியாக வாக்காளரையும், துகிலுறியும் கவுரவர்களாக தேர்தல் ஆணையத்தின் பெயரையும் போட்டு இதை டிஆர்எஸ் தலைவர் ராவும், மஜ்லீஸ் கட்சித்தலைவர் ஓவைசியும் ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.
காங்கிரசின் இந்த போஸ்டர் பாஜகவை கொதிப்படையச் செய்துள்ளது.மகாபாரத கதாபாத்திரங்களை கேலிச்சித்திரமாக்குவதா? என்று கண்டனம் செய்துள்ளதுடன் இதற்கு காங். தலைவர் ராகுல் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும் என்று தெலுங்கானா பாஜக தலைவர் கூறியுள்ளார். மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஒவைசியோ, ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்த உரிமை உள்ளதுதான்.
ஆனால் காங். இது போன்று மோசமாகவா சித்தரிப்பது? இது போல் சோனியா, பிரியங்கா, ராகுலை சித்தரித்தால் காங்கிரஸ் கட்சியினர் சும்மா இருப்பார்களா? என்றும் வெடித்துள்ளார். திரௌபதி போஸ்டர் விவகாரம் தெலுங்கானாவில் சர்ச்சையாகிக் கிடக்கிறது.