புதிய சிபிஐ இயக்குநர் யார்? பிரதமர் தலைமையிலான குழுவில் கருத்து வேறுபாடு-தேர்வில் இழுபறி!
பிரதமர் மோடி தலைமையில் பல மணி நேரம் நடந்த தேர்வுக் குழு கூட்டத்தில் கருத்தொற்றுமை இல்லாததால் புதிய சிபிஐ இயக்குநர் தேர்வு செய்யப்படவில்லை.
சிபிஐ இயக்குநராக இருந்த அலோக்வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது, மீண்டும் பதவியில் அமர்ந்தவுடன் இடமாற்றம் செய்தது என பல்வேறு சர்சசைகளுக்கு இடையே பதவியை ராஜினாமா செய்தார். சிபிஐ இயக்குநர் பொறுப்பில் தற்காலிகமாக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்தும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதனால் புதிய சிபிஐ இயக்குநரை தேர்வு செய்ய பிரதமர் மோடி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் கார்கே,உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆகியோர் கொண்ட தேர்வுக் குழு நேற்று இரவு கூடியது.
பிரதமர் இல்லத்தில் பல மணி நேரமாக நடந்த கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. 79 அதிகாரிகளின் பட்டியலில் சரியான விவரங்கள் இல்லை என கார்கே சுட்டிக் காட்டியதால் புதிய சிபிஐ இயக்குநரை தேர்வு செய்யாமலே கூட்டம் முடிந்தது. அதிகாரிகளின் முழு விவரங்கள் அடங்கிய பட்டியல் தயாரானவுடன் அடுத்த வாரம் மீண்டும் குழு கூடி சிபிஐ இயக்குநரை தேர்வு செய்யும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.