10% இட ஒதுக்கீடு : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் - தடை விதிக்கவும் மறுப்பு!
பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு குறித்து மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
10% இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் அவசரச் சட்டத்திற்கு தடை கோரி இளைஞருக்கான சமத்துவ அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், சஞ்சீவ் கண்ணா அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறி ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்து சட்டமாகி விட்டதால் தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் மறுத்து விட்டனர். ஆனால் இட ஒதுக்கீடு வழங்கியது குறித்து மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிடுவதாக கூறினர்.
4 வாரத்திற்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் அதன் பின் இட ஒதுக்கீடு வழக்கு விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்கள் இப்போதே நடைமுறைக்கு கொண்டு வந்து விட்டன.
மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் வரும் நிதியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.