பாஜக பக்கம் சசிகலா வருவார்! டெல்லியின் திடீர் நம்பிக்கை!

மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே புதுச்சேரியில் பேட்டியளித்தபோது, ‘மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விருப்பப்படி மக்களவைத் தேர்தலில் பலமான கூட்டணி அமைய அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க ஆகிய கட்சிகள் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர வேண்டும்.

தமிழகத்தின் நலனை கருதி அ.ம.மு.க, பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் அக்கட்சியின் துணைப் பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும்’ எனப் பேசினார்.

இந்தக் கருத்து அரசியல்ரீதியாக விவாதமானது.

இதே கருத்தில் பாஜக தலைவர்களும் இருப்பதாகச் சொல்கின்றனர்.

தமிழக பொறுப்பாளர்கள் சிலர், 'அண்ணா காலத்தில் ஓர் அமைச்சர் கூட இல்லாத சசிகலா சமூகத்துக்கு அதிமுகவில் 10 அமைச்சர்கள் வரையில் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். இதை மக்கள் மன்றத்தில் எடுத்துக் கூறி, அதிகாரத்தில் இல்லாத மொழிவழி சிறுபான்மை மக்களை ஒன்று திரட்டுவதுதான் மோடியின் நோக்கமாக இருந்தது.

ஆனால், அந்த வியூகத்தை தமிழக பாஜக தலைவர்கள் சரியாகக் கொண்டு செல்லவில்லை என்ற கோபம், மேலிடத் தலைவர்களுக்கு இருக்கிறது. திமுக, காங்கிரஸ் கூட்டணிக்குள் சசிகலா சென்றுவிடக் கூடாது என்ற பயமும் அவர்களுக்கு இருக்கிறது.

அப்படிச் சென்றுவிட்டால் மோடி எதிர்ப்பு வாக்குகள் அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்துவிடும் என்பதுதான்.

கொடநாடு விவகாரத்தில் எடப்பாடியையும், 11 எம்எல்ஏக்கள் வழக்கில் பன்னீருக்கு எதிராகவும் அஸ்திரங்களை வீசும்போது சசிகலா, பாஜக பக்கம் வந்துவிடுவார். இதனால் 40 தொகுதிகளிலும் திமுக, காங்கிரஸ் அணியால் வெல்ல முடியாது என நினைக்கின்றனர்.

இணைப்பு என்ற வார்த்தையை முன்வைத்து பாஜகவினர் பேசி வருவதும் இதன் அடிப்படையில்தான். அதன் ஒரு பகுதியாகத்தான், டிடிவிக்கு மத்திய அமைச்சர் பதவி என அத்வாலே பேசினார்' என்கிறார்கள்.

- அருள் திலீபன்

More News >>