ஜாக்டோ ஜியோ போராட்டம் தீவிரமடைகிறது - தற்காலிக ஆசிரியர் பணிக்கு போட்டா போட்டி!
ஆசிரியர் போராட்டத்தால் தற்காலிக ஆசிரியர் பணிக்கு ஏராளமானோர் போட்டி போட்டு விண்ணப் பங்களை பெற்று வருகின்றனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சம்பள நிலுவையை வழங்க வேண்டும் என 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் குதித்துள்ளனர். பணிக்குத் திரும்ப வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் பணியவில்லை. சம்பளம் பிடித்தம், மாற்று ஆசிரியர்கள் ஏற்பாடு என்று அரசு கடும் எச்சரிக்கை விடுத்தும் போராட்டம் நீடிக்கிறது.
அரசின் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம். போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. இன்று மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஆசிரியர், அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பள்ளிகளில் மாணவர்களின் பாடம் பாதிக்காமல் இருக்க ரூ7.500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது.
மாவட்ட கல்வி அலுவலகங்களில் தற்காலிக ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் இன்று வழங்கப்பட்டது. காலையிலேயே இந்த விண்ணப்பங்களை வாங்க ஏராளமான இளைஞர்களும், பெண்களும் ஆர்வத்துடன் குவிந்தனர். தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களும் விண்ணப்பங்களை போட்டி போட்டு வாங்கினர். ரூ.7.500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்ததால் விண்ணப்பம் பெற்ற பலரும் உற்சாகம் இழந்தனர். அந்த ஒரு நிபந்தனையை மட்டும் தளர்த்தினால் பாடம் நடத்த நாங்களும் தயார் என பட்டதாரிகள் பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.