சொத்துக்காக பெற்ற மகனை உயரிருடன் எரித்து கொலை செய்த தாய்: கேரளாவில் பரபரப்பு
திருவனந்தபுரம்: சொத்து தொடர்பாக தனக்கு எதிராக பேசிய மகனை உயிருடன் தீயிட்டு எரித்து கொலை செய்த தாயை போலீசார் கைது செய்துள்ளனர். பெற்ற மகன் என்றுக்கூட பார்க்காமல் தாயே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம், குன்டாரா பகுதியை சேர்ந்த சிறுவன் ஜித்து(14). கடந்த 14ம் தேதி அன்று ஜித்து திடீரென காணாமல் போனார். இதனால், ஜித்துவின் தந்தை போலீசில் அளித்த புகாரை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வந்தனர்.
இந்நிலையில், வீட்டின் அருகே சில அடி தூரத்தில் சிறுவன் ஜித்து எரிந்து கரிக்கட்டையான நிலையில் பிணமாக கிடந்தார். இதைக்கண்ட ஜித்துவின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர்.
இந்த சம்பவம் குறித்து, சிறுவனின் பெற்றோரிடம் விசாரித்தபோது, சிறுவனின் தாய் ஜெயாமோள் முன்னுக்குப்பிண்ணாக பதில் அளித்துள்ளார். இதனால், ஜெயாமோள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும், ஜெயமோளின் கையிலும் தீக்காயம் இருந்ததால் சந்தேகம் வலுவடைந்தது.
இதன் பின்னர், போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், ஜெயமோள் மகனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “கணவரின் குடும்பத்தாருக்கு சொத்துகள் தொடர்பான வாக்குவாதத்தில் தனக்கும் மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்து, மகனை உயிருடன் தீயிட்டு எரித்து கொலை செய்தேன்” என கூறினார்.
இதையடுத்து, ஜெயமோளை கைது செய்த போலீசார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.