குறுகிய காலத்தில் சமூக வலைதளங்களை கைப்பற்றிய அமமுக
சமூக வலைதளங்களின் தொடக்க புள்ளியாக யாகூ மெசஞ்சர் அடுத்தது ஆர்குட்.. இப்போது இவற்றின் பரிணாம வளர்ச்சிகளாக ஃபேஸ்புக், ட்விட்டர் என நீள்கிறது பட்டியல்.ஆர்குட் காலத்தில்தான் அரசியல் குழுக்கள் சமூக வலைதளங்களில் அணிவகுக்கத் தொடங்கின. அதன்பின்னர் ஃபேஸ்புக் கோலோச்ச தொடங்கியது.
ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களை நாம் தமிழர் கட்சியினர் முழு வீச்சில் பயன்படுத்தினர். சமூக வலைதளங்களில் ஒரு கருத்து கணிப்பு நடத்தினால் சீமான் முதல்வராவது எளிது என்கிற அளவுக்கு நிலைமை இருந்தது.
பின்னர் அனைத்து அரசியல் கட்சிகளும் சமூக வலைதளங்களை கையகப்படுத்தின. இதற்காகவே தகவல் தொழில்நுட்ப அணிகளும் உருவாக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் தகவல் தொழில் நுட்ப அணி பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர்.
இந்த காலகட்டங்களில் தமிழக அரசியல் தலையே காட்டாமல் இருந்தவர் தினகரன். ஜெயலலிதா மறைவின் போதும் தினகரன் பெரிதாக தலைகாட்டவில்லை.
சசிகலாவுக்குப் பின்னால் நின்றிருந்தார்... அவ்வளவுதான்.. சசிகலா செல்லும் இடங்களுக்கு உடன் சென்றிருந்தார். இப்படிதான் தினகரன் இருந்தார். காலச்சக்கரம் சுழன்றது.
சசிகலா சிறைக்குப் போக அதிமுகவின் துணைப் பொதுச்செயலர் பொறுப்பில் தினகரன் நியமிக்கப்பட்டார். சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு அந்த அதிமுகவை கஸ்டடியில் எடுக்க துடித்தது பாஜக.
அப்போது ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தொப்பி சின்னத்தில் வேட்பாளராக போட்டியிட்டார் தினகரன். பின்னர் பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்தானது. ஒருகட்டத்தில் தர்மயுத்த கோஷ்டி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கை கோர்க்க அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடங்கினார் தினகரன்.
இங்கிருந்து தினகரனின் சகாப்தம் தொடங்குகிறது. குறுகிய கால கட்சிதான் என்ற போதும் அத்தனை மாவட்டங்களிலும் அத்தனை அணிகளுக்கும் நியமனங்கள் நடைபெறுகின்றன.. சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சி கோலோச்சுவதைப் போலவே இணையாக அமமுகவும் பயணிக்கிறது. மிக குறுகிய காலத்தில் தினகரனை செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவர் என்கிற தோற்றத்தை உருவாக்கியிருக்கிறது இந்த சமூக வலைதளங்கள்.