நீர்நிலைகளை ஆக்ரமிக்கும் காற்றாலைகள்: தூத்துக்குடியில் விவசாயிகள் போராட்டம்

தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ம.தி.மு.க விவசாயிகள் அணியினர் போராட்டம் நடத்தினர்.

ஜனவரி 24ம் தேதி வியாழனன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது கால்வாய்கள், வாய்க்கால்கள், மடைகள் உள்ளிட்ட நீர்நிலைகளையும் புறம்போக்கு நிலப்பகுதிகளையும் ஆக்ரமித்துள்ள தனியார் காற்றாலை நிறுவனங்கள் மேல் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டுமென மகாராஜன் என்பவர் தலைமையிலான ம.தி.மு.க. விவசாயிகள் வலியுறுத்தினர்.

மாவட்ட ஆட்சியரின் ஆணையை மீறி தனியார் காற்றாலைகள் நிர்வாகம், நீர்நிலைகளுக்குள் மின்கம்பங்களை நாட்டுவதோடு மற்ற கட்டமைப்பு வேலைகளையும் செய்வதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.

வடகிழக்கு பருவமழை பொய்த்துப்போனதால், தூத்துக்குடியை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். 2016 - 17 மற்றும் 2017 - 18 ஆண்டுகளுக்கான பயிர் காப்பீட்டு தொகை அளிக்கப்படவேண்டும் என்று கோரிக்கை தெரிவித்ததோடு மாவட்ட நிர்வாகம் குறைகளை கேட்பதோடு அவற்றுக்கு உரிய பதில் தராமல் இருப்பதாகவும், உரம் வாங்கினால் மட்டுமே பயிருக்கான மானியம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறுவதாகவும் புகார் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

More News >>