ராகுல் பிரதமராக தமிழகத்தில் அமோக ஆதரவு - கருத்துக் கணிப்பில் பரபர தகவல்!

தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் தலைமையிலாக மகா கூட்டணிக்கு அமோக ஆதரவும், ராகுல் காந்தி பிரதமராவதற்கும் மக்களின் விருப்பமாக உள்ளது என்று புதிய கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

வரும் மக்களவைத் தேர்தல் குறித்து நியூஸ் 18 தமிழ் செய்தி சானலும், பர்ஸ்ட் போஸ்டும் இணைந்து நடத்திய மெகா சர்வே முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மெகா கூட்டணி எடுபடுமா என்பதற்கு 52 சதவீதம் பேர் ஆம் என்றும், எடுபடாது என 38 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர் பிரதமராக யாருக்கு ஆதரவு என்று கேட்டதற்கு, ராகுல் காந்தி என 69.7 சதவீதம் பேரும், மோடிக்கு 10.6 சதவீதம் பேரும் மட்டுமே ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

மம்தாவுக்கு 2.1%, மாயாவதிக்கு 2.8% பேரும் ஆதரவு அளித்துள்ளனர். தேசிய அளவில் மகா கூட்டணி எடுபடுமா என்ற கேள்விக்கு ஆம் என்று 49.1% பேரும் இல்லை என 34.2%, உறுதியாக தெரியவில்லை என 16.7 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். தேசிய அளவில் பிரதமர் பதவிக்கு தகுதியான வேட்பாளர் என மோடிக்கு 52.8 சதவீதத்தினரும், ராகுலை 26.9% பேரும் ஆதரித்துள்ளனர்.

தேசிய அளவில் பிரதமர் வேட்பாளர் போட்டியில் மம்தா, மாயாவதிக்கு சொற்ப ஆதரவே உள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. நாட்டு நலனைக் காப்பதில் நம்பகத்தன்மை, வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவது, ஊழலை ஒழிப்பது, நிதி நேர்மையல் நம்பகத்தன்மை, சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்துவது போன்றவற்றில் யார் சிறப்பாகச் செயல்படுவார் என்ற கேள்விக்கும் தேசிய அளவில் மோடிக்கு 55% மேலானவர்கள் ஆதரவாகவும் 25 சதவீதம் பேர் மட்டுமே ராகுலை ஆதரித்துள்ளனர்.

நாடு முழுவதும் 23 மாநிலங்களில் 320 எம்.பி. தொகுதிகளில் 34 ஆயிரத்து 470 பேரிடம் கருத்துக் கேட்கப்பட்டதாகவும், அறிவியல்பூர்வமான கேள்விகள் அடிப்படையில் மக்களிடம் நடத்தப்பட்டதாக கருத்துக் கணிப்பை நடத்திய இப்சாஸ் நிறுவனத்தின் நிபுணர் பர்ஜா சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.

More News >>