5 ஆயிரம் ரூபாய்க்கு ஸ்மார்ட்போன்: இந்திய மொபைல் சந்தையில் ஜியோமி அதிரடி!
இந்திய மொபைல் சந்தையில் சாம்சங் இடத்தைத் தட்டிப் பறித்துள்ளது சீனாவின் ஜியோமி நிறுவனம். பட்ஜெட் விலை போன்களுக்கு அதிரடி ஆஃபர் அளித்து சந்தையில் முதலிடத்தைப் பிடித்திருக்கும் ஜியோமி ஸ்மார்ட்போன்கள் விரைவில் ஐந்தாயிரம் ரூபாய்க்கு கிடைக்க உள்ளன.
சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகரித்து வரும் வேளையில் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப சந்தைகளில் ஒன்றான இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் விற்பனை எண்ணிக்கை மட்டும் 150 பில்லியன் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி இடத்தைப் பிடிக்க சாம்சங்- ஜியோமி இடையே நடந்த பனிப்போரில் ஜியோமி வென்றுள்ளது.
மலிவு விலையில் மக்களுக்குத் தகுந்த பட்ஜெட் விலை போன்களை சந்தைப்படுத்துவதில் சாம்சங் முன்னோடியாக இருந்து வந்தது. ஆனால், பத்தாயிரம் ரூபாய்க்கு ஸ்மார்ட்போன்களை ஆன்லைன் மூலம் இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்நுழைந்த ஜியோமி இன்று 5 ஆயிரம் ரூபாய்க்கு ஸ்மார்ட்போன்கள் வெளிவரும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதன் மூலம் இந்திய சந்தையில் ஜியோமி போன்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
இழந்த இடத்தைப் பிடிக்க ஆன்லைன் மூலம் தனது புதிய ரக ஸ்மார்ட்போனை விரைவில் அட்டகாசமான அம்சங்களுடன் வெளியிட இருப்பதாக சாம்சங்-கும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.