ஷேர்சேவ்: சீன தயாரிப்புகளுக்கான மின்வணிகதளம்

சீனாவில் மட்டும் கிடைக்கக்கூடிய ஸோமி நிறுவன தயாரிப்புகள் அனைத்தையும் இந்தியாவிலிருந்தே வாங்குவதற்கான பிரத்யேக மின்வணிக தளமான 'ஷேர்சேவ்' (ShareSave) பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

உலக அளவில் முதன்முதலில் இந்தியாவில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டும் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐஓஎஸ் பயனர்கள் மற்றும் இணைய வழியில் இது எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற தகவல் வெளியாகவில்லை.ஷேர்சேவ் மூலம் நேரடியாக ஒரு பொருளை வாங்கலாம். அது தவிர மூன்று விதமான முறைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பேர்அப் (Pair-up):'ஜோடி' அல்லது 'இணை' என்ற முறைமை. இதில் உங்களோடு உங்கள் குடும்ப உறுப்பினர், உறவினர் அல்லது நண்பர் யாரையாவது சேர்த்து ஒரு தயாரிப்பை இருவரும் வாங்கலாம். அப்போது இருவருக்குமே தள்ளுபடி விலையில் பொருள் கிடைக்கும்.

டிராப் (Drop):இதில் ஒரு தயாரிப்பை நீங்கள் வாங்குவதற்கென முன்குறித்துக் கொண்டு, அதை வாங்கும்படி உங்கள் நட்பு வட்டத்திற்கு அழைப்பு விடுக்கலாம். எத்தனை பேர் இதில் இணைகிறார்களோ அதைப் பொறுத்து, தயாரிப்பின் குறிப்பிடப்பட்ட விற்பனை விலை எட்டப்படும்போது, அழைப்பு விடுத்த உங்களுக்கு 50 விழுக்காடு தள்ளுபடியுடன் அல்லது கட்டணமின்றியோ அப்பொருள் கிடைக்கும்.

கிக்ஸ்டார்ட் (Kickstart):ஒரு பொருளின் விற்பனை செயல்பாட்டை முதலாவது குறைந்த கட்டணம் செலுத்தி ஆரம்பித்து வைத்தல். நீங்கள் ஆரம்பித்து வைத்த விற்பனை வெற்றிகரமாக முடிந்தால், நீங்கள் முதன்முதலில் ஆரம்ப கட்டணமாக செலுத்திய தொகையைப் போன்று பத்து மடங்கு மதிப்புள்ள விற்பனை சலுகை (ஷாப்பிங் வவுச்சர்) உங்களுக்குக் கிடைக்கும்.முன்னர் கூறியது போன்று, இந்த முறையில் அல்லாது நேரடியாகவும் நீங்கள் 'ஷேர்சேவ்' மூலம் பொருள்களை வாங்க இயலும். இதன் மூலம் நீங்கள் செய்யும் ஆர்டர்கள், நேரடியாக வீட்டுக்கு வந்து சேரும்.

ஆண்ட்ராய்டு இயங்குதள சாதனத்தில் கூகுள் ப்ளே ஸ்டோரில் 'ஷேர்சேவ்' உள்ளது. தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

More News >>