ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி ஊழியர்கள் திங்கள் முதல் சாகும் வரை உண்ணாவிரதம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை உடனே திறக்கக் கோரி திங்கள்கிழமை முதல் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
நாசகார ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியின் சுற்றுச் சூழலில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த ஆலையை மூடக் கோரி மக்கள் எழுச்சிப் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு இழுத்து மூடியது.
இதற்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க வலியுறுத்தி அதன் ஊழியர்கள் வரும் திங்கள்கிழமை முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளனர்.