வன்னியர் வாக்குகளை வளைக்க மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாருக்கு பத்மஸ்ரீ விருது!

வடதமிழகத்தில் வன்னியர் வாக்குகளை வளைக்க மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாருக்கு பத்மஸ்ரீ விருதை மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் எதைத் தின்றால் பித்தம் தெளியும்; தேர்தலில் வெல்ல முடியும் என்கிற நிலையில் பரிதாபமாக இருக்கிறது பாஜக. அதேபோல் யாருடன் கூட்டணி சேர்ந்தால் ஒரே ஒரு எம்பி தொகுதியாவது ஜெயிக்க முடியும் என்கிற கணக்கில் இருக்கிறது பாமக.

டாக்டர் ராமதாஸைப் பொறுத்தவரையில் அதிமுக கூட்டணியை தேர்வு செய்திருக்கிறார்; ஆனால் அவரது மகன் அன்புமணியோ திமுக கூட்டணிதான் நல்ல வாய்ப்பு என கணக்குப் போடுகிறார்.

தற்போதைய நிலையில் அதிமுக அல்லது அமமுகவுடன் பாமக கூட்டணி அமைக்கும். இதில் அதிமுகவுடன் 6 தொகுதிகள் ப்ளஸ் ஒரு ராஜ்யசபா சீட் என்கிற பேரத்தில்தான் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது.

அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக என திமுகவுக்கு எதிரான மெகா கூட்டணிக்கு சாத்தியங்கள் அதிகம். இதனால்தான் திமுக கூட்டணியை உடைத்து காங்கிரஸ், விசிகவை தம் பக்கம் வளைக்க தினகரன் வியூகம் வகுத்து வருகிறார்.

இந்நிலையில் மத்திய பாஜக அரசு பத்ம விருதுகளை நேற்று அறிவித்தது. இந்த விருதுகள் அனைத்தும் அப்பட்டமாக லோக்சபா தேர்தலை மனதில் வைத்துக் கொண்டே அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒடிஷாவில் முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு நெருக்கடி கொடுக்க, அவரை கூட்டணியில் இழுக்க அவரது சகோதரிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அவர் ஏற்க மறுத்துவிட்டார்.

தமிழகத்தில் பாமக செல்வாக்கு செலுத்தும் வட தமிழக வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்யும் வகையில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவித்துள்ளது. என்னதான் பத்மஸ்ரீ விருதை அறிவித்தாலும் ஒட்டுமொத்த வன்னியர்களும் அப்படியே வாக்குகளை அள்ளி கொடுப்பார்களா? என்பது சந்தேகமே.

More News >>