லோக்சபா தேர்தல் கூட்டணி விவகாரம்... ஊடகங்கள் மீது டாக்டர் ராமதாஸ் பாய்ச்சல்
லோக்சபா தேர்தலில் பாமகவின் கூட்டணி தொடர்பாக ஊடகங்கள் வெளியிடும் செய்திகளுக்கு அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் ஃபேஸ்புக்கில் இன்று பதிவிட்டுள்ளதாவது:
‘கத்தி முனையை விட பேனா முனை மிகவும் வலிமையானது’’ என்று 1839-ஆம் ஆண்டில் ஆங்கில எழுத்தாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எட்வர்ட் புல்வர் லைட்டன் என்பவர் ஊடகங்களின் வலிமையை விளக்கினார். 19-ஆம் நூற்றாண்டில் வர்ணிக்கப்பட்டதை விட ஊடகங்களின் வலிமை 21- ஆவது நூற்றாண்டில் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. 180 ஆண்டுகளுக்கு முன் கத்தியுடன் ஒப்பிடப்பட்ட ஊடகத்தின் வலிமை இப்போது முப்படைகளை விட அதிகமாகியிருக்கிறது. ‘‘பதினேழாம் நூற்றாண்டில் காலாட்படை வைத்திருந்த நாடு வல்லரசு எனப்பட்டது; பதினெட்டாம் நூற்றாண்டில் கடற்படை வைத்திருந்த நாடு வல்லரசு எனப்பட்டது; பத்தொன்பதாம் நூற்றாண்டில் விமானப்படை வைத்திருந்த நாடு வல்லரசு எனப்பட்டது; இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் உலக ஊடகங்களை எவர் தனக்கு கட்டுப்பட்டதாக்கிக் கொள்கிறாரோ அவருக்கு உலக நாடுகள் எல்லாம் சொந்தமாகி விடும்’’ என மலேசியப் பிரதமர் மகாதீர் கூறியிருக்கிறார்.
மகாதீர் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை தான். ஊடகங்கள் தான் அரசியலையும், அரசியல் மாற்றங்களையும் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றன. ஊடகங்களின் இந்த வலிமை ஜனநாயகத்தின் வலிமை ஆகும். ஆனால், இந்த வலிமை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு பதிலாக, ஜனநாயகத்தை சிதைக்க சிலரால் பயன்படுத்தப்படுகிறது என்பது தான் மிகவும் வருத்தமளிக்கும் உண்மையாகும்.
உயிர்காக்கும் அறுவை சிகிச்சை செய்வதற்காக பயன்படுத்தப்பட வேண்டிய கத்தியை ஒரு மருத்துவர், உயிரை எடுப்பதற்காக பயன்படுத்துவது எவ்வளவு மோசமானத் தவறோ, அதைவிட மோசமான தவறு ஊடகங்களில் உள்நோக்கத்துடன் தவறான, அவதூறான தகவல்களை திட்டமிட்டு பரப்புவது ஆகும். நாடாளுமன்ற மக்களவைக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான அறிவிக்கை மார்ச் மாதம் முதல் வாரத்தில் தான் வெளியிடப்படும். அதன்பிறகு தான் தேர்தல் கூட்டணி மற்றும் களப்பணிகள் தீவிரமடையும். மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி அமைத்து தான் போட்டியிடும் என்று பொதுக்குழுவில் முடிவெடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் பொதுக்குழு உறுப்பினர்களால் எனக்கு அளிக்கப்பட்டுள்ளது. கூட்டணி குறித்து முடிவெடுக்கவும், அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் இன்னும் 40 நாட்களுக்கு மேல் உள்ளன. இந்த விஷயத்தில் அவசரப்படவோ, பதற்றப்படுவதற்கோ எந்தத் தேவையும் இல்லை.
ஆனால், தமிழகத்திலுள்ள ஊடகங்கள் கூட்டணி குறித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவலை கற்பனையாக வெளியிட்டு வருகின்றன. என்னைத் தவிர்த்து பாட்டாளி மக்கள் கட்சியின் மற்ற தலைவர்களை சந்திக்கும் போதெல்லாம் மீண்டும், மீண்டும் கூட்டணி பற்றி யூகங்களின் அடிப்படையிலே ஊடகங்கள் வினா எழுப்பப்படுகின்றன. கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கு வழங்கப் பட்டுள்ளது. கூட்டணி குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அவ்வாறு இருக்கும் போது கூட்டணி குறித்து எந்த தகவலை, யார், எப்படி கூற முடியும்? என்பதை யாரும் சிந்திக்கவில்லை.
கூட்டணி குறித்து பாட்டாளி மக்கள் கட்சி விரைவில் முடிவெடுக்கத்தான் போகிறது. தமிழ்நாட்டின் உரிமைகளையும், மக்களையும் பாதுகாக்க எதை செய்ய வேண்டுமோ, அதை பாட்டாளி மக்கள் கட்சி நிச்சயம் செய்யும். அதற்கு முன்பாகவே ஊடகங்கள் கற்பனையாக செய்திகளை வெளியிடுவதும், அவற்றின் அடிப்படையில் விவாதங்களை நடத்துவதும் எந்த வகையிலும் நியாயமில்லை; அறமில்லை. அதிலும் குறிப்பாக ஊடகங்களுக்கு புதிதாக வந்துள்ள இளம் செய்தியாளர்கள் சிலர், இந்திய பிரஸ் கவுன்சில் விதிகளைப் பற்றிக் கூட அறிந்து கொள்ளாமல் செயல்படுகின்றனர். பொது இடங்களில் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற புரிதல் கூட அவர்களுக்கு இல்லாதது வருத்தமளிக்கிறது.
சில நாட்களுக்கு முன் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசிடம் நேர்காணல் கண்ட இளம் செய்தியாளர் ஒருவர், ‘‘கூட்டணி தொடர்பாக உங்களுக்கும், உங்கள் கட்சியின் நிறுவனருக்கும் இடையே மோதல் நிலவுகிறதாமே?’’ என்று வினா எழுப்பியுள்ளார். இதை அறியாமையின் வெளிப்பாடா? அல்லது வன்மமா? என்பதை உணர்ந்து கொள்ள முடியவில்லை. ஊடகங்களின் குதர்க்கமான, குயுக்தியான தாக்குதல்கள் அனைத்தும் பாட்டாளி மக்கள் கட்சியை முன்வைத்தே ஏவப்படுவது தான் பல்வேறு ஐயங்களை ஏற்படுத்துகிறது. கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்று விளக்கமளித்தப் பிறகும் கூட, ‘‘இந்தக் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று பா.ம.க. கூறவில்லை.... அந்தக் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று கூறவில்லை... அதனால் அந்தக் கட்சியுடன் தான் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி அமைக்கும்’’ என்று ஊடகங்களே கனவில் யூகித்து, கற்பனையில் விவாதித்து, முடிவெடுக்கப்படாத ஒன்றை முடிவாகச் சொல்கின்றன.
ஊடகங்கள் செய்திகளை எவ்வாறு வெளியிட வேண்டும் என்பது குறித்து 42 வகையான நடத்தை விதிகளை இந்திய பிரஸ் கவுன்சில் வகுத்துள்ளது. அவற்ரின் மூன்றாவது விதியில்,‘‘அரசியல் மாற்றங்கள் குறித்து செய்தி வெளியிடுவதற்கான சுதந்திரம் செய்தித்தாள்களுக்கு உண்டு. அது அவற்றின் கடமையும்கூட. ஆனால், அதைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு குறிப்பிட்ட அவதூறான கோணத்தில் செய்தி எழுதக்கூடாது. பத்திரிகைகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஊடக சுதந்திரம் என்பது ஒரு அரசியல் கட்சி அல்லது அரசியல் தலைவர் குறித்து பொய்யான மற்றும் அவதூறானச் செய்திகளை எழுதி, அவர்களின் எதிர்கால அரசியல் வாய்ப்புகளை சீர்குலைப்பதற்கு வழங்கப்பட்ட உரிமம் அல்ல என்பதை ஊடகங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஊடகங்கள் அனுபவித்து வரும் கருத்துரிமை உள்ளிட்ட சலுகைகளை பொறுப்புணர்வுகொண்டதாக ஊடகங்கள் கருதவேண்டும்’’ என்று தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழகத்திலுள்ள பெரும்பான்மையான ஊடகங்கள் இத்தகைய விதிகளை காற்றில் பறக்கவிட்டு, தங்கள் வசதிக்கும், விருப்பத்திற்கும் ஏற்பவே செய்தி வெளியிடுகின்றன.
இந்திய பிரஸ் கவுன்சிலின் முதலாவது நடத்தை விதி,‘‘துல்லியம் மற்றும் நேர்மை: துல்லியமற்ற, அடிப்படையற்ற, பண்பற்ற, தவறாகப் பொருள் தரக்கூடிய அல்லது திரிக்கப்பட்ட செய்திகளை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்கவேண்டும். ஒரு விஷயத்தின் அனைத்து அம்சங்களும் செய்தியில் வழங்கப்படவேண்டும். நியாயப்படுத்த முடியாத வதந்திகள் மற்றும் தவறான செய்திகளை உண்மை என்று முன்வைக்கக்கூடாது’’ என்று அறிவுறுத்துகிறது. இரண்டாவது நடத்தை விதியில்,‘‘செய்தி வெளியிடுவதற்குமுன் சரிபார்த்தல்: பொது நலன் சம்பந்தப்பட்ட செய்தியோ, அல்லது தனிநபர்கள் மீது அவதூறு பரப்பும் வகையிலான செய்தியோ கைக்குக் கிடைத்தவுடன் அதை ஆசிரியர் கவனமாக சரிபார்க்கவேண்டும். அந்தச் செய்தியின் உண்மைத் தன்மையை வேறு ஆதாரங்களிலிருந்து உறுதிசெய்யவேண்டும். அந்தச் செய்தியில் சம்பந்தப்பட்ட தனிநபர்கள் அல்லது நிறுவனங்களிடம் பேசி அவர்களின் கருத்து என்ன என்பதை அறிந்து தேவையான இடத்தில் பதிவு செய்யவேண்டும்’’ என மிகத் தெளிவாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், பெரும்பான்மையான ஊடகங்கள் இந்த நடத்தை விதிகளையோ, ஊடக அறங்களையோ மதிக்கவில்லை; பின்பற்றவில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை. இது ஜனநாயகத்துக்கு எவ்வகையிலும் வலிமை சேர்க்க்காது. அதுமட்டுமின்றி மக்களுக்கு செய்யும் துரோகமாகவும் அமையும்.
ஊடகங்கள் பற்றி சீனப் புரட்சியாளர் மாவோ கூறும் போது,‘‘அச்சில் வருவதையெல்லாம் உண்மை என நம்பும் போக்கு மக்களிடம் இருப்பதாக மாவோ கூறுகிறார். அத்தகைய நம்பகத்தன்மையை ஊடகங்கள் மக்களிடம் உருவாக்கி வைத்துள்ளன. அந்த நம்பிக்கையில் தான் பெரும்பாலானமக்கள் இன்னமும் ஊடகங்களைத் தங்கள் குரலைப் பிரதிபலிக்கும் கடைசி ஆயுதமாகக் கருதுகின்றனர்’’ என்கிறார். ஆனால், கள எதார்த்தம் அப்படித்தான் இருக்கிறதா? என்பதை ஊடகங்கள் தான் சொல்ல வேண்டும். ஊடகங்களை குறை கூறுவதற்காக நான் இவ்வாறு சொல்லவில்லை. அது என் நோக்கமும் இல்லை. ஊடகங்களின் அறம் சாரா செயல்பாடுகளால் பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள போதிலும், ஊடகங்கள் தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நண்பர்கள்.... கூட்டணித் தோழர்கள்!
அந்த உரிமையில் ஊடக நண்பர்களுக்கு மீண்டும் ஒருமுறை வேண்டுகோள் விடுக்கிறேன்..... ‘‘ ஊடக நண்பர்களே, எப்போதும் நான்காவது தூணாக செயல்படுங்கள். ஒருபோதும் நெறி பிறழ்ந்து செயல்படாதீர்கள்!’’
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.