தேர்தலை குறி வைத்தா மத்திய பாஜக அரசின் பத்ம விருதுகள்? - சரசரவென வெடிக்கும் சர்ச்சை
பத்ம விருதுகள் வழங்கப்பட்டதில் தேர்தல் ஆதாயம் தேடப் பார்க்கிறது பாஜக என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. நாட்டின் உயர் விருதான பாரத ரத்னா விருது முதன் முதலில் 1954-ல் வழங்கப்பட்டது.
கலை, இலக்கியம், அறிவியல், பொது வாழ்க்கையில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருது அளிக்கவும், ஆண்டுக்கு அதிகபட்சம் 3 பேருக்கு என்றும் விதிகள் உருவாக்கப்பட்டது. 1954-ல் இந்த விருது ராஜாஜி, டாக்டர்.ராதாகிருஷ்ணன்,அறிவியல் மேதை சர்.சி.வி.ராமன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து வந்த காலங்களில் பத்ம விருதுகளுடன் பல்வேறு சர்ச்சைகளும் தொடர்கதையாகி விட்டது. இறப்புக்குப் பின்னும் விருது வழங்கலாம் என்று லால்பகதூர் சாஸ்திரிக்காக விதி மாற்றம் செய்யப்பட்டது. 1977களில் ஜனதா ஆட்சியில் பாரத ரத்னா விருது வழங்குவதையே நிறுத்தி விட்டனர்.
மீண்டும் காங்கிரஸ் ஆட்சி வந்தவுடன் விருதுகள் வழங்குவது தொடர்ந்தது. 1988-ல் எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின் அவருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டதும் அரசியல் ஆதாயத்துக்காக என்று சர்ச்சை எழுந்தது.
1992-ல் நேதாஜிக்கு அவருடைய மறைவுக்குப் பின்னர் பாரத ரத்னா விருது என அறிவிக்கப்பட, நேதாஜி இறந்துவிட்டதாக எப்படி கூறலாம் என்று கோர்ட்டுக்கே சென்று விட்டனர் நேதாஜியின் பக்தர்கள். பாரத ரத்னா அறிவிக்கப்பட்டு வழங்காமல் போனது இதுதான் முதல்முறை.
இந்தியருக்கு மட்டுமே பாரத ரத்னா என்ற விதியும் தளர்த்தப்பட்டு அன்னை தெரசா, நெல்சன் மண்டேலா, கான் அப்துல்கபார் கான் ஆகிய வெளிநாட்டினருக்கும் வழங்கப்பட்டது. அதன் பின்னர் மதன்மோகன் மாளவியா, சர்தார் பட்டேல் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்ட போதும் சர்ச்சைகள்.
இதுவரை மொத்தம் 48 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தற்போது முன்னாள் ஜனாதிபதி பிரணாப் உடன் சேர்ந்து ஜன சங்கத்தின் தலைவராக இருந்த நானா தேஷ்முக்குக்கு விருதை வழங்கியிருப்பது தேர்தல் நேரத்தில் பாஜக ஆதாயம் தேடப் பார்க்கிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இதனை பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் சகோதரி நாசூக்காகவே வெளிப்படுத்தி விட்டார். உயர்ந்த விருதுக்கு தேர்வு செய்து என்னை அங்கீகரித்தது மகிழ்ச்சி தான். ஆனால் தேர்தல் நேரத்தில் இந்த விருதைப் பெறுவது தவறான புரிதலையும், தர்மசங்கடத்தையும் ஏற்படுத்திவிடும் என்று விருதை மறுத்து விட்டார் அவர்.
தமிழகத்திலும் பங்காரு அடிகளாருக்கு விருது வழங்கப்பட்டதும் வன்னியர் மற்றும் மேல்மருவத்தூர் பக்தர்களின் வாக்கு வங்கியை குறிவைத்துத்தான் என்றும் ஒரு பக்கம் சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசையிடம் கேள்வி எழுப்ப சீறி விட்டார். ”பங்காரு அடிகளார் தகுதியானவர் தானா? இல்லையா? என்று மேல்மருவத்தூர் வரும் பெண் பக்தர்களிடம் கேளுங்கள் தெரியும்” என்று ஒரே போடாக போட்டார்.