நக்சல்களின் கோட்டைக்குள் ஊடுருவி தேசிய கொடி ஏற்றி சவால்விட்ட சத்தீஸ்கர் போலீஸ் அதிகாரி
70-வது குடியரசு தினம் நாடு முழுவதும் பொது இடங்கள், அரசு அலுவலகங்கள், கட்சி அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளுக்கு சவால்விடும் வகையில் அவர்களது கோட்டைக்குள் நுழைந்து தேசியக் கொடியை ஏற்றியுள்ளனர் போலீஸ் அதிகாரிகள்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் பள்ளத்தாக்கு நக்சலைட்டுகளின் பிடியில் உள்ளது. இப்பகுதியில் ஓடும் இந்திராவதி ஆற்றின் மீது போக்குவரத்துக்காக பாலம் கட்டப்பட வேண்டும் என்பது பழங்குடி மக்களின் நீண்டகால கோரிக்கை.
ஆனால் பழங்குடி மக்கள் வாழும் வனப்பகுதிகளில் கட்டுமானப் பணிகள் எதனையும் மேற்கொள்ள நக்சலைட்டுகள் அனுமதிப்பதில்லை. அதனால் இந்திராவதி ஆற்றின் மீது பாலம் கட்ட வேண்டும் என வலியுறுத்தி வந்த சமூக ஆர்வலரை நக்சலைட்டுகள் படுகொலை செய்தனர்.
இந்நிலையில் நக்சலைட்டுகள் கொக்கரித்த அதே இந்திராவதி ஆற்றின் கரையில் அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் குடியரசு தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி ஏற்றினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பஸ்தார் போலீஸ் எஸ்.பி, இதே இந்திராவதி ஆற்றின் பாலத்துக்காகத்தான் சமூக ஆர்வலர் போராடி உயிர் நீத்தார். அதே இந்திராவதி ஆற்றில் நாங்கள் தேசியக் கொடி ஏற்றி இருக்கிறோம்.
இதன்மூலம் இந்த பஸ்தார் பள்ளத்தாக்கில் மக்களின் ஆட்சியும் காவல்துறையின் ஆட்சியும்தான் இனி நடைபெறும் என பிரகடனம் செய்திருக்கிறோம் என்றார்.