பாஜக ஆட்சி முடியும் வரை பேரறிவாளன் உட்பட 7 பேருக்கு விடுதலை கிடையாது: சங்கராச்சாரியை சந்தித்த சு.சுவாமி திட்டவட்டம்
மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி முடியும் வரை ராஜீவ் வழக்கில் தண்டனை அனுபவிக்கும் பேரறிவாளன் உட்பட 7 பேருக்கு விடுதலையே கிடையாது என அக்கட்சியின் ராஜ்யசபா தலைவர் சுப்பிரமணியன் சுவாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ராஜீவ் வழக்கில் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பி வைத்துள்ளது.
ஆனால் ஆளுநரோ அமைச்சரவை தீர்மானத்தின் மீது எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வருகிறது. இது அரசியல் சாசன விரோதம் என விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காஞ்சி சங்கரச்சாரியார் விஜயேந்திரரை சுப்பிரமணியன் சுவாமி இன்று சந்தித்து பேசினார். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்தியில் பாஜக ஆட்சி இருக்கும் வரை அந்த 7 பேரையும் விடுதலை செய்யவே முடியாது என்றார்.
அண்மையில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக விஜயேந்திரர் செயல்படுவதால் முதல்வர் எடப்பாடி தரப்பு கோபத்தில் இருப்பதாக நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில் விஜயேந்திரரை சுப்பிரமணியன் சுவாமி சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.