டெல்லி குடியரசுதின ஊர்வலத்தில் கோவணாண்டியாக தமிழர்கள் ...சிறுமைப்படுத்தவா ...? பெருமைப்படுத்தவா...?

டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தியில் "கோவணாண்டி"களாக தமிழர்களை சித்தரித்தது விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

டெல்லியில் ஆண்டுதோறும் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில், ஒவ்வொரு மாநிலத்தின் சார்பிலும் அலங்கார ஊர்திகள் இடம்பெறும். அந்தந்த மாநிலங்களின் பெருமைகளை, பாரம்பரியத்தை பறைசாற்றுவது போன்ற காட்சிகளை சித்தரித்து அலங்கார ஊர்திகள் கம்பீரமாக வருவதை நாட்டின் அரசியல், அதிகார உயர் பதவியில் உள்ளவர்கள் கண்டு ரசிப்பர்.

நாடு முழுவதும் தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பப்படுவதை கோடானுகோடி மக்கள் கண்டு ரசிப்பர். இந்த வரிசையில் தமிழகத்தின் சார்பில் விவசாயத்தை பறைசாற்றும் வகையில் அலங்கார ஊர்தி இடம்பெற்றிருந்தது. இதில் விவசாயிகள் அனைவரும் முக்கால் நிர்வாண கோலத்தில் கோவணாண்டிகளாக உழுவது போலும், விவசாயப் பணிகள் செய்வது போலும் சித்தரிக்கப்பட்டிருந்தனர்.

கூடவே பெண்களும் ஜாக்கெட் அணியாமல் சேலையுடன் தோற்றமளித்தனர். கூடவே தமிழக விவசாயிகள் நிலைமையைக் கண்டு தான் மகாத்மா காந்தியும் மேலாடையைத் துறந்தார் என்ற வாசகத்துடன் காந்தி உருவத்தையும் மேலாடை இன்றி சித்தரித்திருந்த காட்சியும் இடம் பெற்றிருந்தது. 

 இது தமிழர்களை பெருமைப்படுத்த வா? அல்லது சிறுமைப்படுத்த வா? என்ற சர்ச்சை எழுந்துள்ளது.தமிழகத்தின் வீர,தீர, பாரம்பரிய பெருமைகளை பறைசாட்ட எத்தனையோ சிறப்பம்சங்கள் உள்ளது. டெல்லியில் தமிழக விவசாயிகள் சமீப காலத்தில் இப்படி அரை நிர்வாணம் ,முழு நிர்வாணமாக போராடியதே பெரும் சர்ச்சையானது. இப்போது அதை மீண்டும் நினைவூட்டுவது போன்றே இப்படி விவசாயிகளை கோவணாண்டிகளாக சித்தரிக்கலாமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

More News >>