நாளைக்குள் பணிக்கு திரும்பாவிடில் சஸ்பென்ட் - ஜாக்டோ-ஜியோ அமைப்புக்கு அரசு எச்சரிக்கை !
நாளைக்குள் பணிக்குத் திரும்பாவிட்டால் அனைவர் மீதும் சஸ்பென்ட் நடவடிக்கை என ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர தமிழக அரசு சஸ்பென்ட், கைது, தற்காலிக ஆசிரியர் நியமனம் என அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. போராட்டத்தில் தீவிரமாக உள்ள ஜாக் டோ- ஜியோ அமைப்பு நிர்வாகிகள் 1100 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.425 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் போராடும் ஆசிரியர், அரசு ஊழியர்கள் நாளைக்குள் பணிக்குத் திரும்பினால் அவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது எனவும், நாளையும் பணிக்கு வராவிட்டால் சஸ்பென்ட் தான் என எச்சரித்துள்ளது. மேலும் சங்க நிர்வாகிகளை தேடித் தேடி கைது செய்யும் பணிகளையும் அரசுத் தரப்பில் முடுக்கி விடப்பட்டுள்ளது.
அரசு பேச்சுவார்த்தை நடத்தாமல் கைது, சஸ்பென்ட் நடவடிக்கை மூலம் போராட்டத்தை ஒடுக்க நினைக்கிறது. இதற்கெல்லாம் அஞ்சாமல் நாளை முதல் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.