மோடியின் மதுரை வருகையை திசை திருப்பிய வைகோவின் கருப்பு பலூன் போராட்டம்.

மோடி வருகையை எதிர்த்து மதுரையில் நடத்திய கருப்பு பலூன் போராட் டத்தால் அனைவரின் கவனத்தையும் திசை திருப்பி விட்டார் வைகோ மதிமுகவினர் உற்சாகமாக கூறுகின்றனர்.

தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் மோடி தமிழகத்திற்கு வந்தால் கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்துவோம் என்று வைகோ கூறியிருந்தார். மதுரை எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவுடன் சேர்த்து பாஜகவின் பிரச்சாரக் கூட்டத்திற்கும் மோடி மதுரை வருகிறார் என்ற அறிவிப்பு வெளியான நாளிலேயே கரும்புக்கொடி போராட்டத்தையும் அறி வித்துவிட்டார் வைகோ .

முதலில் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் போராட்டம் நடத்த பழங்காநத்தம் பகுதியை ஒதுக்கி அனுமதி தருவதாக போலீஸ் கூற, நகரின் மையப் பகுதியான பெரியார் பேருந்து நிலையத்தில் தான் நடத்துவோம் என பிடிவாதம் பிடித்து அனுமதி பெற்று விட்டனர். காலை 9 மணி முதலே பெரியார் பேருந்து நிலையம் முன் கைகளில் கருப்புக்கொடியுடன் மதிமுக தொண்டர்கள் திரள ஆரம்பித்தனர். 10 மணிக்கு வைகோவும் வர மேலும் கூட்டம் திரண்டது.வெறும் கருப்புக்கொடி போராட்டம் தானே என போலீசாரும் மெத்தனமாக இருந்தனர்.

திடீரென கொத்துக் கொத்தாக கருப்பு பலூன்கள் கொண்டு வரப்பட்டு வானில் பறக்க விட்டார் வைகோ . இதனால் மோடியின் பயணம் பற்றிய செய்திகளிலேயே மூழ்கி இருந்த மீடியாக்களின் கவனம் வைகோ பக்கம் திசை மாறியது. வைகோவின் போராட்டத்தில் கூட்டமும் அதிகமாக இருந்ததால் போலீசார் தடுக்க முற்பட்ட போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் பிரச்னை பெரிதாகி விடக்கூடாது போலீசார் பாதுகாப்பாக சுற்றி வளைத்து நின்றனர். இதுதான் சாக்கு என்று வைகோவும் வீராவேசமாக மைக் பிடித்து மோடியை உண்டு...இல்லை .. எனப் பொரிந்து தள்ளிவிட்டார்.

இன்றைக்கு மதுரையில் மோடி வருகையை விட வைகோ போராட்டம் தான் எல்லோரையும் கவர்ந்து விட்டது என்று மதிமுகவினர் உற்சாகத் துள்ளலில் உள்ளனர்.

More News >>