மோடியும், அமித் ஷாவும் இந்துக்களே கிடையாது - பிரகாஷ் ராஜ் அடுத்த அட்டாக்
என்னைப் பொறுத்த வரையில் பிரதமர் மோடியும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் இந்துக்களே கிடையாது என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக நடிகர் பிரகாஷ் ராஜ் பாஜவையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். நடந்து முடிந்த குஜராத் தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்திருந்த அவர், “நீங்கள் உங்கள் வளர்ச்சி அரசியலால் இத்தேர்தலில் அமோக வெற்றியல்லவா பெற்றிருக்க வேண்டும்... 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவது என்னவாயிற்று???” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், கர்நாடகா மாநிலம் சிர்சி பகுதியில் பொதுக்கூட்டம் ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். அப்போது பேசிய அவர், பாஜகவை தாக்கிப் பேசினார். இதனையடுத்து, பாஜகவின் இளைஞர் அமைப்பான யுவ மோர்சாவை சேர்ந்த வாலிபர்கள், மாட்டு கோமியத்தால் பிரகாஷ் ராஜ் பேசிய மேடையை சுத்தம் செய்தனர்.
பாஜகவினரின் இந்த செயலுக்கு, நடிகர் பிரகாஷ் ராஜ் டுவிட்டரில் பதிலடி கொடுத்தார். “பாஜக-வினர் இதேபோல, தான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் கோமியத்தைத் தூக்கிக் கொண்டு வரவேண்டும்” என்று பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.
இதற்கு பதிலுக்கு பாஜகவினர், ‘பிரகாஷ் ராஜ் நல்ல இந்து அல்ல’ என்றும், ‘அவர் இந்துக்களுக்கு எதிரானவர்’ என்றும் தெரிவித்துள்ளனர்.
இதற்கும் பதிலடி கொடுத்துள்ள பிரகாஷ் ராஜ், “தான், பிரதமர் மோடிக்கும், அமித் ஷாவுக்கும் ஹெக்டேவுக்கும், எதிரானவனே தவிர, இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல, இந்துக்கள் யார் என்பதை பாஜக முடிவு செய்ய முடியாது.
உண்மையில் பிறரை கொலை செய்பவர்கள் நல்ல இந்துக்களாக இருக்க முடியாது; அப்படிப்பட்டவர்களை இந்துக்கள் உள்பட யாரும் ஆதரிக்க மாட்டார்கள். என்னைப் பொறுத்த வரையில் பிரதமர் மோடியும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் இந்துக்களே கிடையாது” என்று அவர் காட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும் கூறியுள்ள பிரகாஷ் ராஜ், “பாஜக என் மீது வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு என்னவென்றால், நான் காங்கிரஸ் அரசிடம் இருந்து கர்நாடகாவில் ஒரு எச்எஸ்ஆர் நிலத்தை வாங்கினேன் என்பதாகும்; உண்மையில் எனக்கு எவ்வளவு ஏக்கர் நிலம் இருக்கிறது? என்பது பாஜக-வினருக்கு பாவம் தெரியாது.
30 வருடங்களாக 5 மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நான் நடித்துள்ளேன்; இதற்காக நான் எவ்வளவு சம்பளம் வாங்கி இருக்கிறேன் என்று தெரியுமா? என்னுடைய வருமானம் என்னவென்று என் மீது குற்றம்சாட்டுபவர்களுக்குத் தெரியுமா?
நான் ஒரு கிராமத்தை தத்தெடுத்திருக்கிறேன்; அங்கு 6 ஏக்கர் நிலத்தை பள்ளி கட்டுவதற்காக அளித்துள்ளேன்; அண்மையில் என்னுடைய 2 ஏக்கர் நிலத்தை ஒரு சமுதாய நலக்கூட கட்டுமான பணிக்காக இலவசமாக அளித்துள்ளேன்.
என்றாலும் எனக்கு பெங்களூரில் ஒரு இடம் தேவைப்பட்டது; ஆனால், பாஜகவினரால் அதைப் பொறுக்க முடியவில்லை; அவர்களை வயிற்றெரிச்சலுக்கு உள்ளாக்கி இருக்கிறது; அதனால்தான், நான் இந்துக்களுக்கு எதிரானவன் என்று என் மீது அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.