பாரத ரத்னா விருது குறித்த சர்ச்சை பேச்சு - மல்லிகார்ஜுன கார்கே மீது வழக்கு!
அசாமிய பாடகர் ஹசாரிகாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டதை விமர்சித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி பிரணாப், ஜனசங்கத் தலைவர் மறைந்த நானாஜி தேஷ்முக், அசாமிய பாடகர் பூபென் ஹசாரிகா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. அசாமிய பாடகர் ஹசாரிகாவுக்கு விருது வழங்கியதை கார்கே விமர்சித்து கேள்வி எழுப்பியிருந்தார். ஒரு அசாம் மொழி பாடகர், அதுவும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களைப் புகழ்ந்து பாடியவருக்கு பாரத ரத்னா வழங்கும் போது, சமீபத்தில் ஏழைகளின் கல்வி, மருத்துவத்துக்காக பாடுபட்டு சமீபத்தில் மறைந்த முத்துக்குமாரசாமிக்கு ஏன் வழங்கவில்லை என்று கார்கே விமர்சித்திருந்தார்.
கார்கேவின் பேச்சு அசாமியர்கள் மனதை புண்படுத்திவிட்டதாக அசாமைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜுமகந்தா என்பவர் போலீசில் புகார் செய்ய கார்கே மீது அசாம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதே போன்று குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக அசாம் மக்கள் போராட்டம் நடத்தும் வேளையில், அதனை திசை திருப்பும் வகையில் ஹசாரிகாவுக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு வழங்கியதாக அசாம் பாடகர் ஜூபின் கார்க் என்பவர் விமர்சித்ததற்கு, அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.