மத்திய பாஜக ஆட்சியில் 4 ஆண்டுகளில் 13 எய்ம்ஸ் மருத்துவமனைகள்.. உண்மை நிலை என்ன?- அம்பலப்படுத்தும் பதிவு
மத்திய பாஜக அரசில் 13 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதன் உண்மை தன்மை குறித்து பத்திரிகையாளர் ”Muralidharan Kasi Viswanathan” தமது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:
தாங்கள் ஆட்சிக்கு வரும் வரை இந்தியாவில் 7 எய்ம்ஸ் மருத்துவ மனைகள்தான் இருந்ததாகவும் 2014ல் ஆட்சிக்கு வந்து 48 மாதங்களில் 13 அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவ மனைகளை உருவாக்க ஒப்புதல் அளித்திருப்பதாகவும் மத்திய அரசு சொல்கிறது.
இந்த 13 மருத்துவமனைகளின் நிலை என்ன என்பது குறித்து இந்தியா டுடே இதழ் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்தத் தகவல்களைப் பெற்று, இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது (21 ஜூன் 2018ல் இந்த தகவல் அளிக்கப்பட்டுள்ளது).
1. ஒப்புதல் அளிக்கப்பட்ட 13 மருத்துவமனைகளில் ஜம்மு, காஷ்மீர், பிஹார், தமிழ்நாடு, குஜராத் மாநிலங்களில் வரவிருக்கும் 5 மருத்துவமனைகளுக்கு இதுவரை எந்தப் பணமும் ஒதுக்கப்படவில்லை.
2. ஜம்மு, காஷ்மீர், பிஹார், தமிழ்நாடு, குஜராத்தில் வரவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் எப்போது துவங்கப்படும் என்பதற்கு எவ்வித கால வரையரையும் வகுக்கப்படவில்லை.
3. 2020 மார்ச்சில் துவங்கப்படவிருப்பதாகக் கூறப்படும் உத்தரப்பிரதேச எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான பணத்தில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
4. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தொகுதியான கோரக்பூரில் அமையவிருக்கும் இந்த எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மொத்தச் செலவு 1,011. ஆனால், இதுவரை 98.34 கோடி மட்டுமே நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. ஆக, இந்த மருத்துவமனை அடுத்த ஆண்டு துவங்கப்படாது.
5. ஆந்திர மாநிலத்தில் 1,618 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டது. இதுவரை 233.88 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. 2020 அக்டோபரில் இயங்கவேண்டிய மருத்துவமனை இது.
6. மேற்குவங்கத்தின் கல்யாணியில் கட்டப்படும் மருத்துவமனையின் திட்டச் செலவு 1,754 கோடி ரூபாய். இதுவரை 278.42 கோடி ரூபாய் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. 2020 அக்டோபரில் துவங்கப்பட வேண்டிய மருத்துவமனை இது.
7. மகாராஷ்டிராவின் நாக்பூரிலும் 2020 அக்டோபரில் மருத்துவமனை துவங்கப்பட வேண்டும். ஆனால், திட்டச் செலவு 1,577 கோடியில் 231.29 கோடியே விடுவிக்கப்பட்டுள்ளது.
8. அசாமின் காமரூப் மாவட்டத்தில் அமையவிருக்கும் இந்த மருத்துவமனையின் திட்டச் செலவு 1,123 கோடி ரூபாய். இதுவரை 5 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
9. பஞ்சாபின் பதிந்தாவில் கட்டப்படும் எய்ம்ஸின் திட்டச் செலவு 925 கோடி ரூபாய். 2020 ஜூனில் துவங்க வேண்டிய மருத்துவமனைக்கு இதுவரை 36.57 கோடி ரூபாய் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது.
10. ஜம்முவின் விஜய்பூரிலும் காஷ்மிரின் அவந்திபுராவிலும் எய்ம்ஸிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஆனால், 90.84 கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளது.
11. இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் 1,350 கோடியில் மருத்துவமனையைச் செயல்படுத்தத் திட்டம். 2017 அக்டோபர் 3ஆம் தேதி பிரதமர் அடிக்கல் நாட்டினார். ஆனால், இதுவரை ஒரு பசை ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
12. பிஹாரில் எய்ம்ஸ் மருத்துவமனை துவங்க 2015-16 நிதி அறிக்கையில் உத்தேசிக்கப்பட்டது. மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. இடமோ, நிதியோ முடிவுசெய்யப்படவில்லை.
13. தமிழ்நாட்டின் தோப்பூரில் இடம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எப்போது துவங்குமென்ற அறிவிப்பும் இல்லை.
14. ஜார்க்கண்டின் தேவ்கடில் எய்ம்ஸ் துவங்கப்படுமென அறிவிப்பு. திட்டச் செலவு 1103 கோடி ரூபாய். 9 கோடி ரூபாய் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. 2021ல் மருத்துவமனை செயல்படுமாம்.
இவ்வாறு அப்பதிவில் எழுதப்பட்டுள்ளது.