ஜாக்டோ போராட்டம் தீவிரமாகிறது - ஆசிரியர்களுக்கு ஆதரவாக பள்ளி, கல்லூரி மாணவர்களும் மறியல்!
ஜாக்டோ-ஜியோ போராட்டம் 7-வது நாளாக இன்றும் நீடிக்கிறது.
ஆசிரியர்களுக்கு ஆதரவாக பள்ளி, கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ள்னர். கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக் டோ-ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்தால் பல பள்ளிகளில் ஒரு ஆசிரியர்கள் கூட பணிக்கு வராததால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. பல ஆரம்பப் பள்ளிகள் திறக்கப்படவில்லை.
அரசு அலுவலகங்களிலும் பணிகள் பாதிக்கப் பட்டுள்ளது. போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர அரசு பேச்சுவார்த்தை நடத்தாமல், கைது, சஸ்பென்ட், தற்காலிக ஆசிரியர் நியமனம் என நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனால் இன்றும் போராட்டம் தீவிரமாகி உள்ளது. திருவண்ணாமலையில் அரசுக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆசிரியர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சை, நெல்லை, வேலூர் உட்பட பல்வேறு ஊர்களில் பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜாக்டோ- ஜியோ போராட்டத்திற்கு ஆதரவாக தலைமைச் செயலக ஊழியர் சங்கத்தினரும்,காவல்துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தினரும் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர்.